Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

01 மார்ச் 2011

தேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க


சேக்கிழான்

முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க… 
election_01திருமணமே ஆகவில்லை; குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ‘கூட்டணி ஆட்சிக்கு இப்போதே சம்மதம் தெரிவிக்க  வேண்டும்’ என்று தி.மு.க.வுக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ் கட்சியைக் காணும்போது இந்தப் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில்  தனது பேரம் பேசும் உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்காக 80  இடங்களில் போட்டியிட விரும்புகிறது காங்கிரஸ். ஆனால், தி.மு.க. அதற்குத் தயாரில்லை. ஏற்கனவே பா.ம.க.வுக்கு 31  இடங்களை அளித்துவிட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட துக்கடா கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய நிலையில், 120  இடங்களுக்கு மேல் கண்டிப்பாக போட்டியிட நினைக்கிறது தி.மு.க. இக்கட்சியும் கூட, எந்த அடிப்படையில் தேர்தலுக்குப் பின் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்று நம்புகிறது எனத் தெரியவில்லை. பரவாயில்லை, கனவு காண அனைவருக்கும் உரிமை உள்ளது.
vijaykanth_electionமாறாக, எதிரணி முகாமில் திட்டமிட்ட காய் நகர்த்தல்கள் தெரிகின்றன. அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் கூட்டணி அமைப்பதாக அறிவித்த பிப். 24ம் தேதி, ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள். கடந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு 30 க்கு மேற்பட்ட  இடங்களில் காரணமான தே.மு.தி.க. ஜெயலலிதாவுடன் கைகோர்ப்பது இரு கட்சிகளுக்குமே லாபம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இரு கட்சிகளின் வாக்கு சதவிகிதத்தைக் கூட்டினால், ஆளும் கட்சியின் தோல்வி இப்போதே உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.
போதாக்குறைக்கு, வைகோவின் ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுகின்றன. இக்கட்சிகளிடையிலான தொகுதிப் பங்கீடு தான் சிரமமாக இருக்கும். எப்படியிருப்பினும், தேர்தலுக்கு முந்தைய  நிலையிலேயே அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கான வலிமையுடன் காட்சி அளிக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல், ஊழல் கூட்டாளிகளான தி.மு.க.வும் காங்கிரசும் பேச்சுவார்த்தையில் குழப்பிக் கொண்டிருப்பதைக் காணும்போது, அவர்கள் மீது பரிதாபமே ஏற்படுகிறது.
dmk_admk_congress_allianceகடந்த ஓராண்டாகவே  கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளில் அ.தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளது. சென்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சேர்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆளும் கட்சியின் அடாத செயல்களால் வெறுப்புற்று வெளியேறியதை சாதகமாகப் பிடித்துக்கொண்ட அ.தி.மு.க, முதலில் அவற்றை தமது பக்கமாக திருப்பியது. வைகோ தலைமையிலான  ம.தி.மு.க. வழக்கம் போல அ.தி.மு.கவின் வலுவான துணையாகத் தொடர்ந்தது. ஆயினும், மத்தியில் ஆளும் காங்கிரஸை எப்பாடுபட்டாவது தன்னுடன் கூட்டணி சேர்க்க ஜெயலலிதா திரைமறைவில் முயன்று வந்தார். ஆனால், அலைக்கற்றை (spectrum) ஊழல் பசையால் பிணைக்கப்பட்ட தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க முடியவில்லை.
எனினும், சென்ற தேர்தலில் கூட்டாளியாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலுக்குப் பின் ஆளும் முகாமுக்கு தாவியதை ஜெயலலிதாவால் தடுக்க முடியவில்லை. இப்போது இக்கட்சி, தி.மு.க. கூட்டணியில் 25  இடங்களை கேட்பதாகத் தகவல். ஆசைக்கும் ஓர் அளவு வேண்டாமா?
முஸ்லிம் லீக் கட்சி 10 க்கு   மேற்பட்ட இடங்களைக் கேட்கிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவுள்ள கட்சிகள் கோரும் இடங்களின் எண்ணிக்கையைக் கூட்டினால் எப்படியும் 150  ஐத் தாண்டுகிறது. ராசதந்திரியான கருணாநிதி இப்போது ‘கை’யைப் பிசைந்துகொண்டு அமைதி காக்கிறார்.
கருணாநிதியின் கோபம், கடந்த பிப். 25  ம் தேதி நடந்த காங்- தி.மு.க. இரண்டாவதுகட்டப் பேச்சு தோல்விக்குப் பின் வெடித்தது. ‘காங்கிரஸ் எத்தனை இடங்களை எதிர்பார்க்கிறது?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘234  இடங்களை கேட்கிறது’ என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தார். நக்கலாக அவர் பதில் அளித்ததே கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் செல்லவில்லை என்பதைக் காட்டிவிட்டது.
காங்கிரஸ் தரப்பில் கூட்டணி குறித்துப் பேச அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் ப.சிதம்பரம், வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயகுமார் ஆகிய ஐவருமே தி.மு.க.வுக்கு ஆதரவானவர்கள் தான். இக்குழுவில் இளங்கோவன் இடம்பெறக் கூடாது என்ற தி.மு.க.வின் நிபந்தனையை சோனியா ஏற்றுக் கொண்டார். ஆனால், தனக்கு சாதகமாக இந்த ஐவர் குழு செயல்படும் என்று நினைத்திருந்த கருணாநிதிக்கு, காங்கிரசின் நிபந்தனைகள் பேரிடியாக அமைந்துள்ளன.
‘தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும்; குறைந்தபட்ச செயல்திட்டம் வேண்டும்; அதிகபட்ச (80?) இடங்களை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைகள், கருணாநிதிக்கு மட்டுமல்லாது தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் திகைப்பை ஏற்படுத்தி உள்ளன.
negotiationநடைமுறைக்கு ஒவ்வாத கோரிக்கைகளை முன்வைத்து கூட்டணியை முறிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகமும் தி.மு.க.வினருக்கு ஏற்பட்டுள்ளது.
அதற்கு ஏற்றாற்போல, அலைக்கற்றை ஊழல் வழக்கும் அதிவேகமான முறையில் சென்று கொண்டிருக்கிறது. ஆ.ராசா கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் பெருமிதத்துடன் பேசுவதும் தி.மு.க.வை கதிகலங்கச் செய்துள்ளன. போதாக்குறைக்குக் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் சி.பி.ஐ. நடத்தியுள்ள சோதனை, நம்பிக்கைத் துரோகமாகவே உடன்பிறப்புகளால் பார்க்கப்படுகிறது.
‘தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்று மாறன் இறந்தவுடன் பா.ஜ.க.வைக் கைகழுவியதன் பயனை இப்போது அறுவடை செய்கிறது தி.மு.க’. என்று மனம்  வெதும்பிக் கூறினார், மூத்த தி.மு.க. தலைவர் ஒருவர். பா.ஜ.க.வுக்கு துரோகம் செய்த தி.மு.க.வுக்கு காங்கிரஸ் வடிவில் இப்போது பாடம்  கற்பிக்கப் படுகிறது என்பது அவரது வாதம். எப்படி இருப்பினும், தி.மு.க- காங், கூட்டணி நிர்பந்தங்களின் அடிப்படையில் நீடிக்கவே வாய்ப்புள்ளது. எனினும் அதில், முன்பு போல தி.மு.க.வின் கரம் ஓங்கி இருக்காது  என்பது நிதர்சனம்.
கூட்டணியில் காங்கிரஸ் கை ஓங்குவதையும், அக்கட்சி திடீரென உறவை முறித்துக் கொண்டால் ஏற்படும் சிக்கல்களையும் உத்தேசித்தே பா.ம.கவுக்கு 31  இடங்களை அளித்து அவசர  ஒப்பந்தம் செய்தார் கருணாநிதி. இதன்மூலமாக, காங்கிரஸ் திடீரென ஆதரவை விலக்கிக் கொண்டாலும் கூட, பா.ம.கவின் 18 எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் தற்போதைய ‘மைனாரிட்டி’ ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம். தவிர, மீதமுள்ள இடங்கள் குறைவு என்பதைக் காரணம் காட்டி காங்கிரஸ் கோரிக்கையைப் புறந்தள்ளலாம் என்பது கருணாநிதியின் யோசனை.
பாம்பின் கால் பாம்பறிவது போல, இதை உணர்ந்துகொண்டு தான், காங்கிரஸ் கட்சியும் முறுக்கிக் கொள்கிறது. அண்மையில் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியின் (பா.ம.க) முன்னாள் செயலாளர் வீட்டில் சி.பி.ஐ. நடத்திய சோதனையை மிரட்டலாகவே கருதுகிறது தி.மு.க. முன்னதாக, பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க சோனியா எதிர்ப்பு தெரிவிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் வதந்தியைக் கிளப்பியது குறிப்பிடத் தக்கது.
இப்போதைக்கு செல்லமுத்துவின் உழவர் உழைப்பாளர் கட்சி,  ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, வாண்டையாரின் மூவேந்தர் முன்னேறக் கழகம் போன்ற துக்கடாக் கட்சிகள் மட்டுமே தி.மு.க.வுடன் உடன்பாடு கண்டுள்ளன. இன்னும் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்பது உண்மையே. ஆனால், அ.தி.மு.க. அணியில் இடம் பெறும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அரசியல் காற்றின் திசையைப் புலப்படுத்துகிறது.
இன்னும் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களின் எண்ணிக்கை தீர்மானமாகா விட்டாலும், தே.மு.தி.க, ம.தி.மு.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, கார்த்திக்  தலைமையிலான பார்வர்ட் பிளாக், சேதுராமன்  தலைமயிலான மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிகள் இடம் பெறுவது உறுதியான விஷயம். தவிர, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம்,  பச்சமுத்து தலைமையில் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சி,  தமிழகத் தேசியவாத காங்கிரஸ் (திண்டிவனம் ராமமூர்த்தி) , மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, அம்பேத்கர் மக்கள் கட்சி, கிறிஸ்துவ மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், தமிழ் மாநில முஸ்லிம் லீக், யாதவர் பேரவை, வன்னியர் கூட்டமைப்பு, தலித் மக்கள் முன்னணி, கிறிஸ்துவ மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய தேசியக் குடியரசு கட்சி  ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற உள்ளன. மொத்தத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் 18  கட்சிகள் இடம் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
jayalalitha_election_mummy-returnsஆளும் அணியில் கூட்டணி பேச்சுவார்த்தைகளே திண்டாட்டமாக உள்ள நிலையில், எதிரணியில் கொண்டாட்ட மனநிலை காணப்படுகிறது. இதுவே ஆளப்போகும் அணி எது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலேயே, முதல்சுற்றில் அ.தி.மு.க. அணி முந்தி வருகிறது. போதாக்குறைக்கு மத்தியிலும் மாநிலத்திலும் அரசிலுள்ள கட்சிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதிருப்தி ஆகியவையும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக உள்ளன. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களோ இல்லையோ, அரசியல் கட்சிகள் மாற்றத்தை விரும்புகின்றன என்பதையே, தற்போதைய ‘தகுதிச் சுற்று’ தேர்தல் களம் காட்டுகிறது எனில் மிகையில்லை.
நன்றி : தமிழ் ஹிந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக