Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

10 மார்ச் 2011

தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…


சேக்கிழான்

குரங்கு ஒன்று குட்டியுடன் தண்ணீர்த் தொட்டிக்குள் சிக்கிக் கொண்டது. தண்ணீர் மட்டம் உயர உயர, குரங்கும் தனது குட்டியை மேலே மேலே தூக்கியது. தண்ணீர் மட்டம் கழுத்தை நெருங்கியபோது கூட, குட்டியை சிரமப்பட்டு தலைக்கு மேல் தூக்கிவைத்துக் காப்பாற்ற முயன்றது குரங்கு. ஆனால் பாசம் நெடுநேரம் நீடிக்கவில்லை. தண்ணீர் மட்டம் நாசியைத் தொட்டவுடன் குரங்கு என்ன செய்தது தெரியுமா? சட்டென்று தனது குட்டியை தொட்டிக்குள் போட்டு அதன் மீது ஏறி நின்றுகொண்டது. இப்போது தண்ணீர் மட்டம் பழையபடி அதன் கழுத்துக்குக் கீழ் சென்றுவிட்டது. உயிராசை பாசத்தை வென்றுவிட்டது. எனினும் தண்ணீர் மட்டம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தக் குரங்கு தப்புமா? கீழே தண்ணீர் குடித்து குரங்குக் குட்டி உப்புகிறது…
-பின் நவீனத்துவ பஞ்சதந்திரக் கதை ஒன்றிலிருந்து.
தினமணி கார்ட்டூன்கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால் குழப்பமாகத் தோன்றக்கூடும். ‘சிக்கன் 65’ என்று சொல்வது போல, அது என்ன சனிக்கிழமை 63? செவ்வாய்கிழமை 63? இரண்டிற்கும் என்ன தொடர்பு? இரண்டிடையே என்ன வேறுபாடு? ஒரே எண் தான் 63. ஆனால், மூன்று நாட்களில் அந்த எண் படுத்திய பாடு இருக்கிறதே, அதை நமது பகுத்தறிவுப் பகலவன், முத்தமிழ்க் காவலர், செம்மொழி வேந்தர், டாக்டர் கலைஞர் தம் வாழ்நாளிலேயே மறக்க முடியாது.
இதனைப் புரிந்துகொள்ள சற்றே பூர்வ கதைக்கு செல்ல வேண்டும். அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி கதைக்கு நாம் சென்றாக வேண்டும்.
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணியில் இடம் பெற காங்கிரஸ் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 63; திமுக தருவதாகக் கூறியது 60. இரண்டுக்கும் வித்யாசம் வெறும் மூன்று. ஆனால், கூட்டணியை முறிக்கவே திட்டமிட்டு மூன்று தொகுதிகளை காங்கிரஸ் தூதர் குலாம் நபி ஆசாத் கூடுதலாக கேட்பதாகவும், அதை ஏற்க முடியாது எனவும், கடந்த மார்ச் 5 (சனிக்கிழமை) அறிவித்தார், இளைஞன் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் வசனகர்த்தா ஆகிய கலைஞர். ‘காங்கிரஸ் தற்போது செய்துள்ள இக்கட்டு போல தனது அரசியல் வாழ்வில் எப்போதும் யாரும் செய்ததில்லை’ என்று உருகிய தலைவர், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுக அமைச்சர்கள் ஆறு பேரும் பதவி விலகுவார்கள் என்றும் அறிவித்தார்.
ஏழு ஆண்டுகளாக கூடிக் குலாவிய தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெறும் மூன்று எண்களில் பிட்டுக் கொண்டுவிட்டதாக தானைத் தலைவர் கருணாநிதி அறிவித்ததை நம்ப முடியாமல், அதிர்ச்சியுடன் முகம் கருக்க வேடிக்கை பார்த்தார்கள் கழக உடன்பிறப்புகள். காங்கிரஸ் வேண்டுமென்றே இழுத்தடிப்பது கூட்டணியை முறிக்கத் தான் என்பது பகுத்தறிவாளருக்கு பட்டென்று புரிந்துபோக, கூட்டணி சட்டென்று முறியும் சூழலுக்கு ஆளானது.
பா.ம.க. எதிர்பார்த்ததற்கு மேலாகவே, 31 தொகுதிகளை தாரைவார்த்த தி.மு.க. தலைவர், காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த கூடுதலான 3 இடங்களை ஒதுக்குவது சிரமமா என்ன? தவிர, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் காங்கிரசுக்கும் பல்லாயிரம் கோடி சம்பாதித்துக் கொடுத்ததோடு, சிறைக்கு சென்று தியாகிப் பட்டம் சுமக்கும் ஆ.ராசாவின் அற்புத சேவையை இவ்வளவு சீக்கிரம் சோனியா மறப்பார் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை.
தலைவர் ஏதோ கோபத்தில் மத்திய அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தாலும் மௌனசாமி பிரதமராவது கொஞ்சம் தாஜா செய்வார் என்று எதிர்பார்த்தால், இப்படி ‘காங்கிரஸ் புத்தி’யைக் காட்டிவிட்டார்களே என்று உள்ளுக்குள் பொருமாத உடன்பிறப்பு தமிழகத்தில் இல்லை. அவர்களது கோபம் இரட்டைக் குழல் துப்பாக்கியின் இன்னொரு குழலான வீரமணி மீது தான். அவர் தான் வெண்ணெய் திரண்டுவரும்போது பானையை உடைத்தவர் என்பது கழகத் தொண்டர்களின் கருத்து.
இந்த வீரமணி, நேரம் காலம் தெரியாமல் ‘சுயமரியாதை’யை நினைவுபடுத்த, ஏற்கனவே முறுக்கிக்கொண்டு திரிந்த காங்கிரஸ் மீது தலைவருக்கு கோபம் வர, வீரமணியின் சேட்டைகளை மற்றொரு மணியான ‘தினமணி’ கிழிகிழியென்று (கார்டூனில் தான்) கிழிக்க, ஒரு நல்ல முகூர்த்தத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணிக்கு பாடை தயாரானது.
இருப்பினும் பதவியிலிருந்து விலக விரும்பாத திமுக அமைச்சர்களின் அபிலாஷைகளை 3 நாட்களுக்கு தலைநகரம் கண்டது. தயாநிதி மாறனும் அழகிரியும் (சும்மா வேடிக்கை பார்த்தாலும் அவரும் கூட இருந்தார் அல்லவா?) கடைசிகட்ட முயற்சிகளை மேற்கொண்டு பதவி விலகலை ஒத்திப் போட்டனர். ஆயினும் தலைநகரில் திமுகவை சீந்துவாரில்லை. போதாக்குறைக்கு, ‘திமுக வெளியேறினாலும் மத்திய அரசு கவிழ விட மாட்டோம்’ என்று அறிவித்து, நேரம் காலம் தெரியாமல் கடுப்பு ஏற்றினார் முலாயம்.
கடைசியில் திமுக தனது வீறாப்பைக் கைவிட்டு, சமயோசித சிகாமணியான பிரணாப் முகர்ஜியிடம் தஞ்சம் அடைந்தது. நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் தனது துறை அமைச்சர் என்ற ரீதியில் பிரணாபிடம் பேசி, சமரசத் திட்டங்களை முன்வைத்தார். ‘திமுக தலைவர் ஏதோ கோபத்தில் அவசரப்பட்டு அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்; நீங்கள் நினைத்தால் கூட்டணியைத் தொடரலாம்’ என்று கெஞ்சும் நிலைக்கு திமுக ஆளானது.
அவரும் கடைசியில் மனமிளகினார். பிறகு அகமது படேல், சோனியா, ஆசாத் ஆகியோருடன் ஞாயிறு, திங்கள், செவ்வாய் – 3 நாட்களும் தொடர்ந்து இழுபறி பேச்சு நடந்தது. ஆரம்பத்தில் மிகவும் கறாராக இருந்த சோனியா, சிதம்பரம் உள்ளிட்ட திமுக அபிமானிகளின் வேண்டுகோளை ஏற்று கீழ்இறங்கியதாகத் தகவல். இறுதியில் இரு தரப்பிற்கும் ஒத்த உடன்பாடு எட்டப்பட்டது. அதாவது காங்கிரஸ் 63 தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் ஆசாத். அருகில் நின்று மண்டை ஆட்டினார்கள் அழகிரியும் தயாநிதியும். தமிழகத்தில் இருந்தபடி, கூட்டணி திருப்திகரமாக அமைந்துவிட்டதாக அறிவித்தார் மு.க.
அதுசரி, சனிக்கிழமை காங்கிரஸ் கேட்ட அதே 63 தொகுதிகளைத் தானே செவ்வாய்கிழமை திமுக ஒப்புக்கொண்டது? இதை சனிக்கிழமையே அறிவித்திருந்தால் நாகரிகமாக இருந்திருக்குமே? பேரம் பேசும் ஆற்றலை இழந்து தில்லியில் காங்கிரஸ் காரர்களின் வீடுகளுக்கு காவடி தூக்கி அலைய வேண்டிய நிலைமை வந்திருக்காதே? மூன்று நாளில் 63 என்ற எண்ணின் மதிப்பு மாறிவிட்டதா? என்ற கேள்விகள் உங்களுக்கு இப்போது எழக்கூடும். அதைத்தானே கட்டுரையின் தலைப்பு இங்கு சுட்டிக் காட்டுகிறது?
***
முரண்டு பிடித்த மூழ்கும் கப்பல்கள்:
திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணிக்குள் நடத்திய கூத்துக்களின் பின்னணியில் வேறு பல அம்சங்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முதலாவதாக, மத்திய அரசுக்கு திமுகவால் ஏற்பட்ட சங்கடங்கள் அவர்களை நிலைகுலையச் செய்தன. மத்திய உளவுத் துறை சேகரித்துக் கொடுத்த தகவல்கள், தமிழகத்தில் நிலவும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தின. இதுவும் காங்கிரசின் தீர்க்கமான முடிவுக்கு காரணமானது. காங்கிரசைப் பொருத்தவரை திமுக ஒரு மூழ்கும் கப்பல். இந்தக் கப்பல் இதுவரை சம்பாதித்துக் கொடுத்த பலகோடிகள் பாதுகாப்பாக இருப்பதால், இனிமேல் ஓட்டைக் கப்பலைக் ‘கை’விடலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இது காங்கிரஸ் தரப்பு நிலவரம்.
அதேபோல, இலங்கைத் தமிழரைக் கொன்று குவித்த ராஜபக்ஷே குறித்த பிரசாரம் தமிழகத்தில் எடுபடலாம்; இலங்கைத் தமிழரை காக்க மறந்த மன்மோகனை எதிர்த்து தேர்தல் முழக்கம் செய்யப்படலாம். ஏற்கனவே இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு தமிழகத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் எந்த வலுவும் இல்லாத காங்கிரசை மூழ்கும் கப்பலாக தி.மு.க.வும் கருதியது. மத்தியிலும் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் தானே மன்மோகன் சிங் அரசு? இது திமுக தரப்பு நிலவரம்.
ஆக, இரண்டு மூழ்கும் கப்பல்களும் ஒன்றையொன்று மோதிக்கொண்டு மூன்று நாட்கள் போக்குக் காட்டின. இருப்பினும், இரு கட்சிகளுக்குமே வேறு வழியில்லை. ஜெயலலிதா ஆதரவு பெறுவதைவிட தனியாகவே தேர்தலைச் சந்திக்கலாம் என்று ஒரே குரலில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் கூறியதைக் கேட்ட கட்சித் தலைமை அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மத்திய அரசிலிருந்து விலகுவது இப்போதைக்கு உடனடி பாதிப்பு ஏற்படுத்தாவிட்டாலும், தேர்தலில் திமுக தோற்றால் சாவுமணியாகி விடும் என்பதை வாரிசுகள் உணர்ந்ததால் மறுபரிசீலனை சாத்தியமானது.
இரு கட்சிகளுமே ஊழல் கூட்டாளிகளாக இருந்தபோதும், தங்களைக் காத்துக்கொள்ள ஒருவரை ஒருவர் தியாகம் செய்யத் தலைப்பட்டு நின்றதும், இந்தக் குத்துவெட்டில் அம்பலமானது. என்ன கூட்டணி அமைத்தாலும், அடுத்த ஜூன் மாதம் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு உவப்பாக இருக்காது என்ற உண்மையை அவர்களிடம் யாராவது சொன்னால் நல்லது.
அலைக்கற்றை ஊழல் விவகாரம் வெடித்தபோது அதை மறைக்க அனைத்து தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டவர்கள் மன்மோகன் சிங்கும் கருணாநிதியும். இருவரும் ஒத்த சிந்தனையுடன் இயங்கியது கண்டு கண்வைக்காதவர்கள் இந்திய அரசியலில் கிடையாது. ஆ.ராசா தவறே செய்யவில்லை என்று சத்தியமே செய்தார் காங்கிரஸ் வக்கீல் கபில் சிபல். தி.மு.க.வை விட ஒருபடி மேலாகவே ராசாவைக் காக்க முயன்றவர் சோனியா அம்மையார் தான். கொடுத்துச் சிவந்த கரங்களை வெடுக்கென்று வெட்ட முடியுமா?
dinamanicartoon280211இந்த ஊழலால் காங்கிரஸ் மானம் கப்பலேறியபோதும், மத்திய அரசு நிதானம் காத்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கால், மத்திய அரசு தடுமாறியது. நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அரசு, இறுதியில் மத்தியப் புலனாய்வுத் துறையை நீதிமன்றத்தின் ஆளுகைக்கு ஒப்புக் கொடுத்தது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அலைக்கற்றை ஊழல் விவகாரம் மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்படுகிறது. அதன் விளைவாகவே ராசாவும் அவரது கூட்டாளிகளும் திகார் சிறைக்குள் செல்ல வேண்டியதாயிற்று.
புலனாய்வுத் துறை அரசு கட்டுப்பாடின்றி இயங்கத் துவங்கியபோதே கருணாநிதிக்கு வேர்க்கத் துவங்கிவிட்டது. கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ‘பொதுசேவை’யில் வாழ்வை அர்ப்பணித்த முதல்வருக்கு, அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகவே தெரிந்தது. எனினும் ராசா போட்ட உப்பிற்கு சிறிதேனும் நன்றி பாராட்டுவார்கள் என்ற அவரது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. ராசாவின் வாக்குமூலங்கள் கசியாதபோது நிம்மதி அடைந்த கலாகார் (இப்படித்தான் ஹிந்தி பத்திரிகையாளர்கள் கலைஞரை அழைக்கிறார்களாம்!), கூட்டணிதர்மம் காத்தார்.
ஆயினும், ராசாவின் ஊழல் கூட்டாளி பல்வாவிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாறிய பலநூறு கோடி விவகாரம் கசிந்தவுடன் கலங்கினார் கலாகார். இதை அப்படியே மூடி மறைக்க துடித்த தி.மு.க.வின் கோரிக்கையை பிரதமர் கண்டுகொள்ளவே இல்லை. புலனாய்வுத் துறை உச்ச நீதிமன்றக் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், தன்னால் ஏது செய்ய இயலாது என்றும் கைவிரித்தார், மௌனசாமி. அப்போது தான் கூட்டணியில் முதல் கீறல் விழுந்தது என்பதை பகுத்தறிவு இல்லாதவர்களும் உணர்வார்கள்.
கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்தியப் புலனாய்வுத் துறை நடத்திய சோதனையை அடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களும் ஆதாரங்களும் கூட்டணியில் அதிர்வை ஏற்படுத்தின. ‘சினியுக்’ என்ற நிறுவனம் ரூ. 214 கோடி கொடுத்ததற்கான ஆதாரம் வெளியானவுடன், காங்கிரஸ் மீது தி.மு.க. நம்பிக்கை இழக்கத் துவங்கியது. இது, கூட்டணியில் விழுந்த கீறல் விரிசலான இடம்.
அடுத்து, விசாரணை வளையத்திற்குள் முதல்வரின் அன்பு மகள் கனிமொழியும் மனைவி தயாளுவும், துணைவி ராசாத்தியும் வரக்கூடும் என்ற தகவல்கள் வந்தவுடன் தி.மு.க. தலைவர் நொந்தே போனார். தி.மு.க.வின் தூதர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்ந்து ‘கூட்டணி பேச்சு’ நடத்தினார்கள்; எப்படியாவது விசாரணையின் திசையை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.கனிமொழி உள்ளிட்ட கழக குடும்ப உறுப்பினர்களிடம் செய்யப்படும் விசாரணை என்பது தி.மு.க.வின் சுயமரியாதைக்கு விடுக்கப்படும் சவால் என்பது, ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் விலாவாரியாக விளக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் நிலைமை தி.மு.க.வை விட மோசமாக இருந்தது.
இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிக மோசமான, ஊழல்மயமான, கீழ்த்தரமான அரசு என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்ட மன்மோகன் அரசுக்கு, இனிமேலும் தி.மு.க.வைக் காப்பது முடியாத காரியம் என்பது புரிந்துபோனது. ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கிலாவது காங்கிரஸ் வெல்ல வேண்டுமானால், ‘ஊழலை சகிக்க முடியாது’ என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காங்கிரஸ் புரிய வைத்தாக வேண்டும் என்று காங்கிரஸ் மதியூகிகளும் சொல்லியிருந்தார்கள். அதாவது, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி மாநிலங்களில் வெல்ல தமிழகத்தில் சாகசம் செய்தாக வேண்டும் என்று புரிந்து கொண்டது காங்கிரஸ்.
இந்தக் கருத்திற்கு சுதி சேர்த்தார், முன்னொரு காலத்தில் கருணாநிதியால் முதுகில் குத்தப்பட்ட ஈ.வி.கே.சம்பத் என்ற திராவிட இயக்கத் தலைவரின் மகனும் தற்போதைய காங்கிரஸ் முன்னணித் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக இடம்; ஆட்சியில் பங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கழகம் செய்த இளங்கோவனை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஒதுக்கிய காங்கிரஸ், அவரது வியூகத்தையே கூட்டணியை முறிக்கப் பயன்படுத்தியது. கலைஞர் நெளிந்தார்; பிறகு தெளிந்தார்.
முதலில் காங்கிரஸ் ஐவர் குழு தி.மு.க.வுடன் பேச்சு நடத்தியபோது, கூட்டணியில் காங்கிரசுக்கு 90 இடங்கள் ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பிறகு தேர்தலுக்குப் பிந்தைய அரசு கூட்டணி அரசாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இளங்கோவன், குழுவில் இல்லாமலே, குழுவின் கோரிக்கையைத் தீர்மானிப்பவரானார். கூட்டணிக்குள் விரிசல் பெரிதானது.
மேலிடத் தூதராக வந்த குலாம் நபி ஆசாத்தும் இதே கோரிக்கையை முன்வைக்க, தி.மு.க.வுக்கு பாதை நழுவுவது புலப்பட்டது. சாத்தியமற்ற நிபந்தனைகள் வாயிலாக கூட்டணியிலிருந்து கழன்றுகொள்ள காங்கிரஸ் முயற்சிப்பதாக தி.மு.க. உணர்ந்தது. கடைசிவரை பேச்சுவார்த்தை இழுபட்டு, காங்கிரசுக்கு 60 இடங்கள் என்று முடிவானது. ஆனால், இதனை 63 ஆக வேண்டுமென்றே உயர்த்திவிட்டது காங்கிரஸ் என்பது கருணாநிதியின் குற்றச்சாட்டு. இந்த மூன்று இடங்களுக்காக கூட்டணியை முறிக்கும் அளவுக்கு பகுத்தறிவு இல்லாதவர் அல்ல தலைவர் என்பது உடன்பிறப்புகளுக்குத் தெரிந்திருந்தாலும், முகம் கருக்க, தொண்டை நரம்புகள் புடைக்க காங்கிரஸ் எதிர்ப்பு கோஷம் முதல்முதலாக (மார்ச் 5 ) அறிவாலயத்தில் எழுந்தது.
கழக உயர்நிலை செயல்திட்டக் குழு முடிவெடுத்தபடி, வேண்டாவெறுப்பாக மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய தில்லி சென்றனர், புன்னகை முகமும் புண்பட்ட உள்ளமுமாக தி.மு.க. அமைச்சர்கள் ஆறு பேரும் (மார்ச் 6). கடைசிவரை ஏதாவது சமரசத்தை எதிர்பார்த்தபோதும், தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஏமாற்றம் அளித்தது. திடீரென்று பிரணாப் ஆபத்துதவியாக கருணாநிதியுடன் பேச, சுயமரியாதையை ஒத்திவைத்து, மீண்டும் பேச்சு நடத்த (மார்ச் 7 இரவு) திமுக தயாரானது. இம்முறை, பேசும் பொறுப்பு தயாநிதிக்கு கிடைத்துவிட்டது. அவரது ஏற்பாட்டில், பதவி விலகல் மேலும் ஒரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் காங்கிரஸ் தலைவி சோனியா உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்துகொள்வார் என்பதை திமுக அமைச்சர்கள் எதிர்பார்க்கவில்லை. ”பதவி விலகுவதாக மிரட்டி காரியம் சாதிக்க முடியாது. கூட்டணி தர்மத்தை தனது மிரட்டலால் பாழ்படுத்திவிட்டது திமுக” என்று காங்கிரஸ் கூறும் என்று அவர்கள் கனவிலும் கருதவில்லை. அகமது படேல், பிரணாப் முகர்ஜி போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் மட்டுமே தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய திமுக அமைச்சர்களால், எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவிக்கும் முன் என்னிடம் ஏன் ஆலோசிக்கவில்லை? என்ற சோனியா அம்மையாரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திமுக அமைச்சர்கள் நெளிந்ததாகவும் தகவல்.
திமுக்- காங்கிரஸ் கூட்டணி முறியுமானால், இருவருக்குமே ஆட்சி கவிழும் ஆபத்து இல்லை. மத்தியில் 18 எம்.பி.க்களின் ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டாலும் அதிகாரத் தரகர்களான முலாயம் போன்றவர்கள் மன்மோகன் அரசைக் காத்துவிடுவார்கள்; இருக்கவே இருக்கிறது ‘மதச்சார்பின்மை’ தாரக மந்திரம். தமிழகத்தில் 34 காங்கிரஸ் எம்எல்ஏக்ளின் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் பாமக ஆதரவுடன் தேர்தல் மாதங்களைக் கடந்துவிட முடியும் என்பது கருணாநிதியின் திட்டம். இந்த கணக்கு இரு தரப்பிற்கும் தெரியும். அதேபோல, கூட்டணி முறிந்தால் இரு தரப்பிலும் சேதாரம் இருக்கும் என்பதும் நிதர்சனம். பிறகு ஏன் இரு தரப்பிலும் காலைவாரும் கைங்கரியம் நடந்தது?
தினமணி கார்டூன்
முதலாவதாக, வெறும் மூன்று தொகுதிகளுக்காக நடந்த குத்துவெட்டு அல்ல இது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கழகக் குடும்பம் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதே முக்கிய கோரிக்கையாக இருந்தது என்று தகவல்கள் கசிந்தன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் ராசாவை பலிகடா ஆக்கி இதுவரை தப்பிவந்த திமுக.வையே பலிகடா ஆக்கத் தயாராகி விட்டது காங்கிரஸ் என்பதும் புலப்பட்டது. கூட்டணியை முறிக்க இதைக் காரணமாகக் கட்ட முடியாதே? எனவே தான் மூன்று என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
பிறகு ஏன் மீண்டும் சமரசத்திற்கு திமுக முயன்றது? இதற்கு காரணம் அழகிரி, தயாநிதி, கனிமொழி ஆகியோரே என்பது தலைநகரச் செய்தியாளர்கள் நமுட்டுச் சிரிப்புடன் கூறும் தகவல்கள். திமுக அமைச்சர்கள் எவீருக்கும் பதவி விலக விருப்பமில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை முடுக்கிவிடப்படும் நிலையில் மத்திய அரசிலிருந்து விலகுவது புத்திசாலித்தனமல்ல என்று அழகிரி எடுத்துரைத்து சுயமரியாதைச் சுடர் கருணாநிதியிடம் விளக்கிய பிறகு, நிலவரம் பிடிபட்டது. போதாக்குறைக்கு ‘அண்ணன் எப்பச் சாவான்? திண்ணை எப்போ காலியாகும்?’ என்று காத்திருக்கும் அதிமுக தலைவி ஜெயலலிதாவும் புதுடில்லி நோக்கி பார்வையைத் திருப்பியது திமுகவுக்கு உதறலை ஏற்படுத்தியது; கலவரம் ஏற்பட்டது. கடைசியில், தனது பிடிவாதத்தைக் கைவிட்டு ஆசாத் கேட்ட அதே எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தாரை வார்த்தார் (மார்ச் 8)கலைஞர்.
இதற்காக பாமகவும் முஸ்லிம்லீகும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தலா ஒன்றை தியாகம் செய்தனவாம். என்ன பெருந்தன்மை! திமுகவும் பெருந்தன்மையாக ஒரு தொகுதியை தியாகம் செய்து காங்கிரஸ் கட்சியின் கெளரவம் காத்தது! ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். கீழே விழுந்து பலத்த அடிபட்ட பின்னரும், வெறும் சிராய்ப்பு தான் என்று மழுப்பும் திமுகவைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
2006 சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் 34 தொகுதிகளில் வென்றது. இப்போது காங்கிரஸ் கரம் ஓங்கியதால் 15 தொகுதிகளை கூடுதலாகப் பெற்றுவிட்டது. இதனால், சென்ற முறை 132 தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவின் (வென்றது 99) எண்ணிக்கை இம்முறை 121 ஆகக் குறைந்துவிட்டது. இக்கூட்டணியில் பாமக (30), விடுதலை சிறுத்தைகள் (10), கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (7), இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (2), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1) ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
எதிரணியில் ஆரம்பத்தில் இருந்த சுறுசுறுப்பு இடைக்காலத்தில் ‘காங்கிரஸ்’ காரணமாக மங்கிவிட்டது. அதிமுக அணியிலும் தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டுவிட்டால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துவிடும். இரு அணிகளாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தமிழக பாரதிய ஜனதா 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதற்கான வேட்பாளர் தேர்வும் தொடங்கிவிட்டது. பாஜக போட்டியிடுவதால் குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. பாஜக தீவிரமாக முயன்றால் 5 தொகுதிகளில் வெல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
thanks to : http://www.tamilhindu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக