Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

05 பிப்ரவரி 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரம்-கேள்விக்குள்ளாகும் கலைஞர் டிவி!

Kalaingnar TVடெல்லி: கலைஞர் தொலைக்காட்சியின் 30 சதவீத பங்குகளை வாங்க முயன்ற நிறுவனத்துக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையைப் பெற்ற ஒரு நிறுவனம் ஏன் ரூ. 214 கோடி நிதியுதவி செய்தது என்று கேள்விகள் எழுந்துள்ளன.

ஆனால், இந்தப் பணத்தை கலைஞர் தொலைக்காட்சி பின்னர் திருப்பிக் கொடுத்துவிட்டதும் உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது:

இந்த விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு இதுவரை விசாரித்ததன் அடிப்படையில், 55 பக்க அறிக்கை (status report) ஒன்றை தாக்கல் செய்துள்ளது உச்ச நீதிமன்றத்தில். இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் சில பகுதிகள் வெளியில் கசிந்துள்ளன.

2009-10ம் நிதியாண்டில் டி.பி. ரியாலிட்டி (DB reality) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனம் இரு வேறு நிறுவனங்கள் மூலம் சினியுக் (Cineyug) என்ற நிறுவனத்துக்கு ரூ. 214 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இந்த சினியுக் நிறுவனம் இந்த நிதியைக் கொண்டு கலைஞர் தொலைக்காட்சியில் 30 சதவீத பங்குகளை வாங்க இருந்தது.

ஆனால், பங்குகளின் விலையை நிர்ணயிப்பதில் எழுந்த சிக்கல் காரணமாக அந்தப் பங்குகளை சினியுக் வாங்கவில்லை. அந்தப் பணத்தை எங்களிடம் திருப்பித் தந்துவிட்டது என்று டி.பி. ரியாலிட்டி நிறுவன தலைமை நிதி அதிகாரி ஆசிப் பல்வா கூறியுள்ளார்.

இருந்தாலும் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் ஏன் கலைஞர் தொலைக்காட்சியில் பங்குகளை வாங்க இன்னொரு நிறுவனத்துக்கு உதவியது என்பது இப்போது கேள்வியாகியுள்ளது.

காரணம், இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் இன்னொரு துணை நிறுவனமான ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு தனது 45 சதவீத பங்குகளை ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த எடில்சாட் (Etisalat) என்ற நிறுவனத்துக்கு 900 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குறைந்த விலைக்கு அலைவரிசையை வாங்கிய நிறுவனங்களில் ஒன்று தான் ஸ்வான். இப்போது இந்த நிறுவனம் எடில்சாட்-டிபி என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், தங்களுக்கும் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறது சினியுக் நிறுவனம். மேலும் பங்குகள் விலையை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தாங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் எந்த முதலீடும் செய்யவில்லை என்றும், இதனால் அந்தத் தொலைக்காட்சியில் எங்களது நிதி முதலீடே ஆகவில்லை. பங்குகளை வாங்க முடியாமல் போனதால் டி.பி. நிறுவனத்திடம் நாங்கள் வாங்கிய பணத்தை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், தொலைக்காட்சியின் நிர்வாகியான சரத் குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டு குறித்து சரத் கூறுகையில், கலைஞர் தொலைக்காட்சிக்கு நிதியுதவி பெற பல நிறுவனங்களை நாடினோம். அதில் ஒன்று தான் சினியுக். அந்த நிறுவனத்தின் உரிமையாளரான மொரானியை எனக்கு நீண்ட நாளாகத் தெரியும். இதனால் அவர் முதலீடு செய்ய முன் வந்தார். மற்றபடி அவருக்கு அந்த நிதி எங்கிருந்து வந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் டி.பி. நிறுவனத்திடம் எந்த காலத்திலும் தொடர்பில் இருந்ததில்லை.

சினியுக் நிறுவனத்திடமிருந்து முதலீட்டைப் பெற முடிவு செய்தது நான் தான். இதில் கனிமொழிக்கோ, தயாளு அம்மாவுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன். நிர்வாகி என்ற முறையில் தொலைக்காட்சியை நடத்துவது நான் தான். கனிமொழியோ வேறு யாருமோ தொலைக்காட்சி நிர்வாகத்தில் தலையிடுவதே இல்லை.

மேலும் பங்குகள் விலையை நிர்ணயிப்பதில் பிரச்சனை வந்ததால் சினியுக் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பித் தந்துவிட்டோம். அவர்களுக்கு எங்கள் பங்கை விற்கக் கூட இல்லை என்று கூறியுள்ளார்.

கனிமொழியும் இதையே தெரிவித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக-நிதி விவகாரங்களில் நான் தலையிடுவதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக