Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

09 பிப்ரவரி 2011

ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை


கோயில்களை கொஞ்சம் கொஞ்சமாக நவீனமயமாக்கி, அவற்றை வெறும் பணம்காய்ச்சி மரங்களாக்கி, புராதனச் சின்னங்களை, தடயங்களை அழிக்கத் திட்டம்!

புராதனச் சின்னங்களாம் கோயில்களின் அடிமடியில் கைவைத்தல். தடை செய்யப்பட்ட ஒரு சுத்தம் செய்யும் முறையால் தமிழகக் கோயில்களில் வரலாற்று ஆவணங்கள் அழிப்பு!
மேலே காணும் வாக்கியங்கள் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறதா? மனம் பதறுகிறதா? அப்படியெனில் நீங்கள் நம் புராதனச் சின்னங்கள் மேல் மரியாதையும் மதிப்பும் வைத்திருப்பவர்.
மனம் பதறவில்லையெனில் கட்டாயம் நீங்கள் தமிழக இந்து அறநிலையத் துறையைச் சார்ந்தவராய் இருப்பீர்கள்!
sandblasting-1
கோயில் என்றாலே கடவுளை நம்பாவிடினும், ஒருவன் கலை ரசிகனாக, அதன் சிற்பங்களையும் கற்றளிகளையும் கல்வெட்டுகளையும் ரசிக்கத் தவற மாட்டான். தமிழகத்தில் சுமார் 1,00,000கோயில்கள் உள்ளன (2ஜி ஊழலுக்குப் பிறகு, நாம் போடும் பூஜ்யமெல்லாம் சிறிதாகத்தான் தெரிகிறது!). இவற்றில் சுமார் 45,000 கோயில்கள் இந்து(?) அற(?) நிலையத் துறையின் பராமரிப்பில்(?) வருகிறது. இத்தனை கேள்விக்குறிகளைத் தாங்கி நிற்கும் அத்துறையின் தகிடுதத்தங்கள் சிலவற்றைப் பார்ப்போமா?
கமிஷனர், அதற்குக் கீழ் துணை, இணை ஆகியோர், மற்றும் ஒரு குறிப்பிட்ட கோயிலின் உயரதிகாரி, கோயிலின் புராதனத் தன்மையையோ அல்லது மகிமையையோ கணக்கிலெடுக்காமல், உண்டியல் அதிக வசூல் செய்யும் கோயில் முதல் வகை, அடுத்த அதிக வசூல் செய்யும் கோயில் இரண்டாம் வகை என்றே பிரிக்கின்றனர்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் தமிழகத் தொல்லியல் துறை, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கென ஒரு பத்துநாள் கருத்தரங்கம் நடத்தியது. முடிவுறும் நிலையில், இரு துறையின் தலைவர்களும் (கமிஷனர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்) அமர்ந்த நிலையில் ஒரு நிறைவு விழா நடந்தது. அப்போது கோயில்களைப் பராமரிக்கும் முறை, புதிய பொருள்களில் கட்டக் கூடாது, நாமாக மாற்றங்கள் செய்யக்கூடாது, மண் பீய்ச்சி அடிக்கும் சுத்தம் செய்யும் முறையை கையாளக் கூடாது என்றெல்லாம் கூறக் கேட்ட அறநிலையத் துறை அதிகாரிகளில் ஒருவர் எழுந்து, “சார் நானும் 25 வருஷமா சர்வீஸில் இருக்கேன். இத மாதிரியான பராமரிப்பு பத்தியெல்லாம் எனக்குச் சொன்னதே இல்லையே. எப்படி உண்டி கலெக்ஷன் அதிகப்படுத்தலாங்கிறத தானே சொல்லிக் கொடுத்தீங்க?” என்று போட்டாரே பார்க்கலாம். எல்லார் முகத்திலும் ஈயாடவில்லை.
அந்தக் கருத்தரங்கம் ஒரு கண் துடைப்பு நாடகம். நடத்தியதாகக் காட்டி செலவுகள் காண்பித்து சுருட்டுவதற்குத்தான் அது நடந்தது என்று சொல்லத்தான் வேண்டுமா?
மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலே ஒரு சாட்சி. பழைய புராதன அடையாளங்களான கல்வெட்டுகள் மேல் வெள்ளை, பச்சைப் பூச்சுகள். நாயக்கர் காலத்து ஓவியங்கள் அழிக்கப்பட்டு, பிராயச்சித்தமாக தற்போது ஒரு மலையாள ஓவியரைக் கொண்டு சுவர்களை நிரப்பப் பார்க்கிறார்கள். அதுவும் பலமுறை அதிகமாக்கப்பட்ட பட்ஜெட்டில் (escalated budget!).
சென்னையையே எடுத்துக் கொள்ளுங்கள். மயிலையிலும் திருவல்லிக்கேணியிலும் உள்ள கோயில்களில் புராதனத் தன்மை ஏதேனும் உள்ளதா? தூண்களில் உள்ள சிலைகளின் மேலேயே கம்பிக் கிராதிகள் அடிப்பதும், கல்வெட்டுகளை கை மாறிக் கால் மாறி மாற்றி அடித்து வைப்பதுமாக, விமானங்கள், கோபுரங்கள் முழுதும் அசிங்கமாக எனாமல் பெயிண்ட் பூசப் பெற்று, தம் புராதன, புனிதத் தன்மையை இழந்து நிற்கும் பணங்காய்ச்சி மரங்களாகத்தானே அவை இருக்கின்றன?
கடலுக்கடியில் மூழ்கிவிட்ட ஓர் அரிய கோயில் தரங்கம்பாடி மாசிலாமணி நாதர் கோயில். அதனை அப்படியே மீட்டெடுக்க புராதன ஆர்வலர்கள் போராடி வந்தனர். தொல்லியல் துறையும், அறநிலையத் துறையும் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால், திடீரென அக்கோயிலைப் புனரமைக்க வைப்பு நிதியாக ஒதுக்கப்பட்ட பணத்திற்கான கெடுகாலம் முடிந்துவிடும் என்ற பயத்தில், அதிரடியாக ‘முபாரக் கன்ஸ்ட்ரக்ஷன்’ எனும் காண்டிராக்டர் மூலம் குத்தகை விட்டு, கோயிலைப் புனரமைக்கிறார்களாம். பத்து நாள்களுக்குள் கடலுக்கடியில் உள்ள புராதனச் சின்னங்களை, சிலைகளை, கலைப் பொக்கிஷங்களைக் காப்பாற்றாமல், கருங்கற்களைக் கொட்டி மறைத்து மேடுபடுத்தி, புதிய கோயிலை நிர்மாணித்து விட்டார்கள். அறநிலையத் துறை சட்ட திட்டங்களில், பிற மதத்தினருக்கு காண்ட்ராக்ட் தரக்கூடாது என்று உள்ளது. எங்கே போனது விதி?
இந்தச் சுட்டியிலுள்ள செய்தியைப் பாருங்கள்…
வெள்ளையடிப்பதும், கொள்ளையடிப்பதும் மட்டுமா இவர்கள் செய்வது? ஆகம விதிகளையுமல்லவா தேய்த்து மிதிக்கிறார்கள்?
கோஷ்ட தேவதைகளிலே, மிகவும் பரிதாபத்திற்குரிய தேவதைகள் தக்ஷிணாமூர்த்தியும், துர்க்கையும். படிப்பிற்கோ, திருமணத்திற்கோ, குழந்தை வேண்டியோ, வேறு தோஷ நிவர்த்திக்கோ வியாழக்கிழமைகளில் தக்ஷிணாமூர்த்தியையும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்க்கையையும் அலங்கோலப் படுத்துவது இவர்களின் கைங்கர்யம். அம்மூர்த்தங்களின் அடியிலேயே கற்பூரம் ஏற்றிக் கொழுத்திக் கரியாக்குவதும், எண்ணெய் வழிய பிசுக்குமழை சேர்ப்பதும், ஜிகினா சகிதம் மட்ட ரக வஸ்திரங்கள் சார்த்தியும், மரத்தூளாலான செண்ட் சேர்ப்பிக்கப்பட்ட போலி சந்தனம், கெமிக்கல் சிவப்பால் ஆன கலப்படக் குங்குமம் கொண்டு அழகு(?) செய்வதுமாய், அவர்களுக்கு இந்த அலங்கோலங்களை பக்தர்கள் செய்ய சசதியாக கோஷ்டங்களில் ஒரு எக்ஸ்டென்ஷன் அமைப்பு (concrete extensions) செய்தும், கோயில் கட்டட சாஸ்திரத்தையும் ஆகம சாஸ்திரத்தையும் தொழும் சாஸ்திரங்களையும் சிற்ப சாஸ்திரங்களையும் நகைப்புக்குரிய விஷயங்களாக்கி விட்டு, கடவுளர்களைக் காசு அடிக்கும் இயந்திரங்களாகச் செய்வது யார்?
ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே கடவுளாய் இருப்பவரைக் கட்டம்கட்டி, சிறப்பு வழி, பொது வழி எனப் பிரித்து, கிட்டப் பார்வையாகவும், தூரப் பார்வையாகவும் பார்க்க வைத்து, கல்லாக் கட்டுவதுயார்?
பழங்கால ஓவியங்கள் மிக்க திருப்புலிவனம் சிவன் கோயில், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள மன்னார் கோயில் ஆகியவற்றின் புனரமைப்பின் போது, ஓவியங்கள் அழிக்கப்பட்டு, வெள்ளை அடிக்கப்பட்டு, கற்சுவர்கள் முழுவதற்கும் மண்பீய்ச்சி அடித்து, கல்வெட்டுகளை அழித்து, ஒரு புராதனப்படுகொலையே நடத்தி விட்டார்கள், இந்த ___ __ ___த் துறையினர். இந்து, அறம் என்ற வார்த்தைகளுக்கு மரியாதை தராத அந்த நிறுவனத்தின் முன் அந்த நல்ல வார்த்தைகளைப் போட மனம் ஒப்பவில்லை எனவே இனி, அது ___ __நிலையத் துறை என்றே இக்கட்டுரை முழுதும் குறிப்பிடப்படும்.
சரி, முக்கியமான விஷயத்துக்கு வருவோம். தமிழ் வளர்க்கிற பேர்வழிகளுக்கு, கல்வெட்டுகள் எத்தனை முக்கியமானவை என்று தெரியாதா? அவை தாங்கி நிற்கும் செய்திகள் என்ன என்று தெரியாதா? சுருக்கமாகச் சொன்னால், மன்னர்கள் மற்றும் ஊரின் முக்கிய குடிகள், பெருமக்கள், குலம் கோத்திரப் பாகுபாடின்றி, கோயிலுக்கு அளித்த நிலங்கள், கொடைகள், சாசனங்களாய் எழுதி வைத்துப் போன சட்ட திட்டங்கள், பண்ட மாற்று முறைகள், வரும் பணத்தினை பொது மக்களுக்கு எவ்வாறு உபயோகத்திற்கு தரலாம், அவ்வாறு தரும் பணம் கோயிலுடையது ஆகையால், அதற்கு எம்மாதிரியான வட்டி கோயிலுக்குப் போய்ச்சேர வேண்டும். யார் யாருக்கு எந்த மாதிரியான பணிகள், அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்ன, கோயிலுள் உள்ள ஆதுர சாலைகள் (மருத்துவ மனை) மற்றும் கல்விக்கூடங்களுக்கான பண ஒதுக்கீடு, நடைமுறைகள், ஊர் கட்டுப்பாட்டு விதிமுறைகள் என்பவற்றை எல்லாம் தாங்கி நிற்கும் காலச்சுவடுகள், இந்தக் கல்வெட்டுகள். மன்னன் மக்களுக்கு வகுத்த நெறிமுறைகள், கல்வெட்டுக்களில் அரச மெய்கீர்த்தியோடு (புகழுரை) ஆரம்பித்து, இறுதியில் மேற்கூறிய விஷயங்களுடன் முடிவடைவதாகவே இருக்கும். அருகிலுள்ள கிராமங்கள், மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் கல்வெட்டுகளில் பெரும்பாலும் குறிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள் மிக மிகக் குறைவே.
அங்கேதான் நமது அரசியல்வாதிகள், துறைகளின் மூலம் ஒரு மாபெரும் சதியை அரங்கேற்றி வருகிறார்கள்.
மக்கள் இயைந்து வாழும் முறை, நிபந்தங்கள், அருகிலுள்ள கோயில் சொத்து முறைகள் என்று அன்றைய சூழலில் வாழ்வியலும், மக்களுக்குகந்த மன்னராயும், நிபந்தங்களும், கோயில் பராமரிக்க நிலங்களும் தந்து, ஜாதிச் சண்டைகளற்ற ஒரு கோயிலை இயைந்த (TEMPLE CENTRIC) சமுதாயத்தைப் பேணி காத்தனர் நம் மன்னர்கள்.
sandblasting-3
ஆனால், இன்று படிப்படியாக புனரமைப்பு என்ற பெயரில், காலச்சுவடுகளாம் கல்வெட்டுகளையும் கற்றளிகளையும் அழிக்கும் கூட்டம் ஒன்று இந்த மாநிலத்தில்தான் உருவாகி உள்ளது.
ஆதாரங்கள் கீழே:
2007-இல் அறநிலையத் துறைக்குள், தொல்லியல் துறையின் அறிவுரையின் பேரில் இந்த மணல் பீய்ச்சி அடித்தல் முறைக்கு ஒரு தடைச் சட்டம் வந்தது. சென்னை அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்த திரு.ஆர்.பாலசுப்ரமணியன், அவரது கடிதத்தில் இவ்வாறு எழுதுகிறார்:
சமீபத்தில் (2007-இல் எழுதப்பட்ட கடிதம்) திருவண்ணாமலை கோயிலுக்குப் போனபோது, மணல் பீய்ச்சி அடிக்கும் முறையால் (sand blasting) என்ன கேடுகள் விளைந்துள்ளன என்பதை எங்களால் கண்கூடாகக் காணமுடிந்த்து. சிதறிப்போன தூண்களும், விரிசல்கள் கண்டுவிட்ட சுவர்களும், உடைந்துவிட்ட நந்தியும், புடைப்புச் சிற்பங்களும் சிதறுண்டுவிட்டன. அமோனியா நீரால் கற்றளிகளைச் சுத்தம் செய்யும் முறை 2002-2003 வருடத்திலேயே, சென்னை பார்த்தசாரதிப் பெருமாள் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் மற்றும் மதுரை மீனாக்ஷியம்மன் கோயில்களில் எங்களால் அறிமுகப் படுத்தப்பட்டும், அந்த முறை துரதிருஷ்டவசமாக கைவிடப்பட்டது. வண்டிகள் சுத்தம் செய்யும் சாதாரண மோட்டர் பம்ப் கூட போதும். செலவும் மிகக் குறைவு. இந்த இரண்டு முறையும் கைவிடப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. இந்த முறையைத் தடை செய்த செய்தி மனதுக்கு இதமாக உள்ளது.” [இணையத்தில் இதற்கான சுட்டி]
இணையதளத்தில் இந்த முறையின் தீங்குகளை விளக்கும் இந்தச் சுட்டியைப் பாருங்கள். இது குறித்து ஜியாலஜிகள் சர்வே ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற திரு.பத்ரி நாராயணன் அவர்களிடம் விளக்கம் கேட்டோம்.
அவர் தொல்லியல் துறை அறிஞர் ரீச் பவுஃண்டேஷனின் தலைவர்திரு.தியாக.சத்தியமூர்த்திக்கு எழுதியது:
“பெங்களூர் பெருஞ்சாலையில், காஞ்சிபுரம் தாண்டி உள்ள திருப்பாற்கடல் பெருமாள் கோயில்களில் மணல் பீய்ச்சி அடிக்கும் முறையில் கற்கள் சேதமாவதைப் பற்றி திரு.சந்திரசேகரன் செய்தி அனுப்பினார். நானும் சென்று பார்வை இட்டேன்.
மிகவும் அதிக வேகத்தில் அடிக்கப்படும் மணற்துகள்களின் கெட்டிப்புத்தன்மை (hardness in Mohr units) 10 (வைரத்துக்கு இணையான கூர்மையும் கெட்டித் தன்மையும் கூடியது). ஆனால் சுவர்கள் எழுப்பட்டுள்ள கருங்கற்களின் (Charnockite) கெட்டிப்புத் தன்மை 6. எனவே அதிக கெட்டியான மணல், கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குவது போல், சுவர்களில் பீய்ச்சிஅடிக்கப்படுகின்றன. அதனால் கண்ணிற்குத் தெரியாத விரிசல்கள் சுவர்களில் நிரந்தரமாய் ஏற்படும். கொஞ்சம் நெகிழ்வான கற்கள் சிதறுபடும். 3 மி.மீ வரை உள்ளே செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் மொத்தமாக அழிந்துவிடும், சிலைகளின் அங்கங்கள் ஹீனமாகி விடும். மொத்தக் கோயிலின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் செயல், இந்த மணல் பீய்ச்சும் முறை (sand blasting). எனவே தடை செய்யப்பட்ட இதை நிறுத்த நாம் எல்லாரும் போராட வேண்டும்.” 
இது குறித்து சென்னை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியின் சுட்டி.. 
 
இதுவரை இந்த முறையால் அழிவுப்பாதையில் செல்லும் சில பிரபலக் கோயில்களின் பட்டியல் இதோ..
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
  • அம்பாசமுத்ரம் எரிச்ச உடையார் கோயில்
  • தக்கோலம் கோயில்கள், திருப்பாலைவன நாதர் கோயில், ஆகியவை.
  • குலசேகரநாதர் கோயில், தென்காசி (இங்கே கதவுகளை மூடிக் கொண்டு இரவோடு இரவாக திருட்டுத்தனமாய் மணல் பீய்ச்சி அடித்தனர்.)
     
மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலில் சுண்ணம்பு அடிக்கப்பட்டும், ஓவியங்கள் அழிக்கப்பட்டும், மணல்பீய்ச்சு முறையால் கற்கள் சுத்தம் செய்யப்பட்ட போதும், பல கண்டனங்கள் எழுந்தன. சுட்டி 1 சுட்டி 2 | சுட்டி 3 | சுட்டி 4
 
திருவண்ணாமலையிலும் இதே கதைதான்..
mannarkoil-renovation-board
இருப்பினும் மன்னார்கோயிலில் இத்தகைய அட்டகாசம் தொடர்ந்தது. கொடுமை என்னவென்றால், கோயில் வாசலிலேயே செலவுகள் குறித்த பலகையில், மணல்பீய்ச்சும் செலவுக்குப் பணம் ஒதுக்கப்படிருந்தது! சுட்டி 1 | சுட்டி 2 
சென்னை போரூர் கோயிலிலும் இதே கதைதான்…
திருப்பாலைவனத்தில் கல்வெட்டுகள் மாற்றிப் பதிப்பிக்கப்பட்டும், ஓவியங்கள் வெள்ளையடிக்கப்பட்டும், நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிட்டன.
இதைப் பாருங்கள்! இந்த தடை செய்யப்பட்ட முறையில் சுத்தம் செய்ய நன்கொடை வேண்டிப் பட்டியல்! (எண் 12 – sand blastingபுனரமைப்பு slideshare
வழக்கமாக, புராதனச் சின்னங்கள் அழிக்கப்படும் போது, தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நான் நேரடி மனுக்கள் தந்து, அவர் பார்வைக்கு அவற்றைக் கொண்டு வருவது வழக்கம். இது நேற்று ‘தி ஹிந்து’-வில் வந்த செய்தியின் சுட்டி..
சமீபத்தில் சுமார் 50 கோயில்களில்– திருநெல்வேலி ஜில்லா முழுவதுமாய், புகழ் மிக்க கன்யாகுமரிக் கோயில் உட்பட– பல கோயில்களில் புனரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. அனைத்திலும், வேலை தெரியாத செல்வாக்கு மிக்கவர்களே காண்டிராக்டர்கள்! (அரசியல்வாதிகள், _____த் துறை அதிகாரிகளின் கணவன்மார்கள், உறவினர்கள்..) மாநிலத்தலைமையின் துணைவியாருக்கு ஒரு பெண் உயர் அதிகாரியே மாதம் ஒரு லகரம் _____த்துறையின் சார்பாக கப்பம் கட்டிவிட்டுவருகிறார், தெரியுமா?
sandblasting-2
சரி, இதில் சதிவேலை என்ன இருக்கிறது என்கிறீர்களா?
ஐயா, கல்வெட்டுகள் தான் அக்காலத்து ஸ்டாம்ப் பேப்பர்! கடவுள் கருவறையைச் சுற்றி எழுதுவது,. கோர்ட் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதுவதற்குச் சமம். படிப்பவர்கள் அந்தச் செய்திகளையும் நிபந்த ஆணைகளையும் மீறமாட்டார்கள். இறை நம்பிக்கை அன்று இருந்தது. நம் தென் மண்டலத்து அத்தனை நில ஆவணங்களும் மன்னர்களால் பெரும்பாலும் கல்வெட்டுகளாய்த்தான் பதியப் பெற்றன. இந்த சாண்ட் பிளாஸ்டிங் செய்துவிட்டால், அந்த நிலங்கள் பற்றிய ஆவணங்களை அழித்துவிடலாமல்லவா? அவ்வாறு அழித்துவிட்டால் ஒட்டு மொத்தமாக கோயில் நிலங்களை தாங்கள் அபகரித்துக் கொள்ளலாம் அல்லவா? இதுதான் அரசியல்வாதிகளால், இறையாண்மை என்ற பெயரில், மதச்சார்பின்மை என்ற பெயரில், இந்துக் கோயில்களுக்கு வந்துள்ள ஆபத்து. பிற மதத்தினர் அரசு சார்ந்த துறைகளின் மூலமாகவா அவர்களது வழிபாட்டுத் தலங்களைப் பேணி காக்கின்றனர்? இல்லையே.. இந்துக்களுக்கு மட்டும் எதற்கு ஓர் அறமற்ற துறை? இந்த இந்து மத நம்பிக்கை அற்ற அறம் நிலைக்காத துறையிடமிருந்து தொன்மைமிக்க கோயில்களை மீட்டால்தான் கோயில்களும், அதனுள் உள்ள காலச்சுவடுகளும், கலைப் பொக்கிஷங்களும் மீளும்! இல்லையேல் இந்து மதத்திற்கான அத்தனை வரலாற்றுச் சான்றுகளும் அழியும் நாள் மிக அருகில்! சரி, நாமாக எப்படிப் பராமரிப்பது என்கிறீர்களா. அறிஞர் பெருமக்கள், தொல்லியல், புனரமைப்பு வல்லுநர்கள் நம்மிடையே மிக அதிகமானவர்கள் உள்ளனர். அவர்களை வைத்து இந்துக்களே ஒரு குழு அமைத்து இக்கோயில்களைப் பராமரிக்கலாம்.
நமது கோயில் உண்டியல் பணத்தினை வைத்துக் கொண்டு நாட்டின் அத்தனை பழங்கோயில்களையும்கூட செப்பனிட்டுவிடலாம்.

maraboor-jeya-chandrasekaranகட்டுரை ஆசிரியர் மரபூர் ஜெய.சந்திரசேகரன்,  “ரீச் ஃபவுண்டேஷன்” அமைப்பின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர்.   இந்த அமைப்பு  நமது கோயில்களின் கலைச் சிறப்பையும்  வரலாற்றுப் பாரம்பரியத்தையும்  தெய்வீகச் சூழலையும் போற்றிப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல சீரிய பணிகளைச் செய்து வருகிறது.   கிராம மக்களிடையே தங்கள் ஊர்க் கோயில் சிறப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்,   சிதைந்து கிடக்கும் பழைய கோயில்களைச் சீரமைக்க உதவுதல்,  கோயில்கள் பற்றிய வரலாற்று விவரணங்களை ஆய்வு செய்தல் மற்றும் எடுத்துரைத்தல்,  தன்னார்வலர் குழுக்களை உருவாக்கி  கோயில்களைச் சுத்தம் செய்தல்,   கோயில் பொலிவையும், கலையழகையும் சிதைக்கும்  நடவடிக்கைகளை  உடனுக்குடன் மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக