Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

11 நவம்பர் 2012

பெரியாரின் மறுபக்கம் – பாகம்3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு)

11/11/2012
ம.வெங்கடேசன்

திருக்குறளைப் பற்றிய முரண்பாடு:
‘திருவள்ளுவர் திருக்குறளில் ஆரியக்கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் எழுதியிருக்கிறார். பகுத்தறிவை பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருக்கிறார். தனது மத உணர்ச்சியோடு எழுதியிருக்கிறார்’’ என்று விமர்சனம் செய்த அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர், இதற்கு முரண்பட்ட வகையிலும் பேசியிருக்கிறார். முரண்பட்ட வகையில் பேசுவது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நிகர் ஈ.வே. ராமசாமி நாயக்கரேதான். அப்படி என்ன முரண்பாடு ஏற்படும் வகையில் பேசினார் தெரியுமா? இதோ!
14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை’’ என்றும்
‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.
23, 24-10-1948 அன்று ஈ. வே. ராமசாமி நாயக்கர்,
‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.
முதலில், திருக்குறள் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் நூல் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் ஆரிய தர்மத்தை கண்டிப்பதற்காக ஏற்பட்ட நூல் என்று பல்டி அடித்தார்.
இரண்டாவது, திருக்குறள் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் எழுதப்பட்டது என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் பகுத்தறிவுக்கு புறம்பான கருத்துக்களுக்கு அதில் இடமில்லை என்று கூறி பல்டி அடித்தார்.
மூன்றாவது, தனது மத உணர்ச்சியோடு எழுதினார் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக குறள் இந்து மதக் கண்டன நூல் என்று கூறி பல்டி அடித்தார்.
20.01.1929 குடியரசு இதழில் ஈ. வே. ராமசாமி நாயக்கர், ‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்’’ என்று கூறுகிறார்.
இவ்வாறு கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூல் என்று முரண்படக் கூறுகிறார்.
முரண்பாட்டின் மொத்த உருவம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
மேலும் ஈ. வே. ராமசாமி நாயக்கர்,
‘‘நாம் பின்பற்றத் தகுந்த முறையில், நமக்கு பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது? தொல்காப்பியம் என்று சொல்லுவார்கள். மொழிப்பற்று காரணமாக சொல்வார்கள். ஆரியத்திலிருந்து விலகி, ஆரியக்கருத்துக்களை எதிர்த்து சொன்னார் என்ற முறையில் அதில் ஒன்றுமே இல்லை’’ என்று 1958 டிசம்பர் மாதம் வள்ளுவர் மன்றத்திலே கூறுகிறார். இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சி!
ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா?
‘‘உண்மையாகப் பார்ப்போமானால் நமக்கு இலக்கியமே இல்லை. இலக்கியங்கள் என்று பாராட்டத் தகுந்த இலக்கியங்கள் இருக்கின்றன. நாம் பின்பற்றத் தகுந்த முறையில் நமக்குப் பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது?’’ என்று கேட்கிறார்.
இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு.
சங்க இலக்கியங்கள் இருக்கின்றனவே! அந்த இலக்கியங்களில் புறநானூறு இருக்கின்றனவே! அதில் ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் பின்பற்றத் தகுந்தவையாக இருக்கின்றதே. இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நாலடியார் இருக்கின்றதே! இதையெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் படித்திருக்க மாட்டாரா? நிச்சயம் படித்திருப்பார். ஆனால் அவருடைய நோக்கமே தமிழரை, தமிழைக் கேவலப்படுத்துவதுதானே! சரி நமக்கு இலக்கியங்களே இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஈ.வே. ராமசாமி நாயக்கராவது ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே! அல்லது அவரது கழகத் தோழர்களாவது ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே. அப்படி ஒரு இலக்கியம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை? நாம் பின்பற்றும் முறையில், நமக்குப் பயன்படுகிற முறையில் ஒரு இலக்கியத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொடுத்திருக்கலாமே! இதிலிருந்தே தமிழ் மொழி பழிப்புதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய நோக்கம் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ் வளர பகுத்தறிவுவாதிகளின் பங்கு என்ன? தமிழை வளர்ப்பதற்கு பதில் ஆங்கிலம் வளர்வதற்கு மாநாடு நடத்தியவர்கள்தானே இந்த பகுத்தறிவுவாதிகள்!
திருக்குறளை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?
திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூல் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் 23,24.10.1948 திராவிடர் கழக 19-வது மாநாட்டில்,
‘‘முகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களை குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது’’ என்றும் ‘‘குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். நீங்களும் (கிறிஸ்தவர்கள்) குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாகக் குறளில் ஒன்றும் கிடையாது’’ என்றும் கூறுகிறார்.
முஸ்லிம்களை குறள் மதத்துக்காரர் என்று சொன்னாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – அதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டார்களா? அல்லது திருக்குறளைத்தான் முஸ்லிம்கள் மதித்தார்களா? இல்லவே இல்லை என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை!
1968-டிசம்பர் மாதம், மதனீ என்பவர், திருச்சியிலே ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கிறார். அந்த புத்தகத்தினுடைய தலைப்பு ‘‘முஸ்லீம்களுக்குப் பொதுமறை எது? குறளா? குர் ஆனா?’’ என்பதுதான். இந்தப் புத்தகத்திலே அவர் திருக்குறளையும், குரானையும் ஒப்பிட்டு ஆராய்ந்து கூறியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம்.
‘‘…அத்தகைய தகுதி திருக்குர்ஆனுக்கே உண்டு. குறளுக்கில்லை. திருக்குரான் இறைவன் அமைப்பு. குறள் மனித அமைப்பு. ஒப்பிட்டு பேசுவதோ, போட்டி மனப்பான்மையில் வாதிடுவதோ பெருந்தவறு, கூடாத வினையாகும். ஐந்து வயதுச் சிறுவன், போலு பயில்வானிடம் மல்லுக்கு நிற்பது போலாகும்.’’ (பக்.2)
‘‘இஸ்லாமியனுக்கு இது ஏற்புடையத்தன்று’’ (பக்.3)
‘‘குறள் ஒன்றே பொதுமறை என்று எவர் கூறியிருந்தாலும் சரி; கூறிக்கொண்டிருந்தாலும் சரி, அனைவரெல்லாம் திருகுரானை கற்றுணராதவர்கள் என்றே துணிவுபடக் கூறலாம்.’’ (பக்.5)
‘‘உருப்படியான ஒழுக்க நூல் திருகுரானைத் தவிர உலகில் வேறு எந்த நூலும் இல்லை. இருக்க முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்து வருபவர்கள் இஸ்லாமியர்கள். இறுதி மூச்சுப் பிரியும் வரை இதே நம்பிக்கையில் தான் இருப்பார்கள், இறப்பார்கள்.’’ (பக்.6)
‘‘களங்கமுள்ள ஓர் ஏடு எப்படிப்புனித இலக்கியமாகும்? வாழ்க்கை நூலாகும்? பொது மறையாகும்? எல்லார்க்கும், எல்லாக் காலத்திற்கும் ஏற்புடையதாகும்? திருக்குரானைத் தேன் நிலாவாகக் கருதிடும் சீலர்கள் சிறிதேனும் சிந்தித்தால் நல்ல தெளிவேற்படும்-உண்மை பல பளிச்சிடும்.’’ (பக்.8)
‘‘குறள்நெறி, குரானின் நெறி கொண்டதல்ல. இரண்டின் வழியும் விழியும் வேறு. குரலும் கோட்பாடும் வேறு. (பக்.23)
‘‘வள்ளுவர்க்கு ஒரு கொள்கை இல்லை. ஒரு குறிக்கோள் இல்லை. அதனால் மக்களைத் தன் கொடியின் கீழ் கொண்டு வரமுடியவில்லை’’ (பக்.30)
‘‘திருக்குறளை பாலுக்கு ஓப்பிட்டால், திருக்குரானை தண்ணீருக்கு ஒப்பிடலாம். பால் எல்லோருக்கும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படக்கூடியதல்ல. பொது உணவுப் பொருளாகவும் அது இருந்திட முடியாது. விரும்பக் கூடியதும் அல்ல. தண்ணீரோ அப்படியல்ல. எல்லோருக்கும் எல்லாக் காலத்துக்கம் எல்லாச் சந்தர்ப்பத்திலும் பயன்படக் கூடியதாகும்.’’ (பக்.139)
இவ்வாறு 144 பக்கம் கொண்ட இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் திருக்குறளைத் தாழ்த்தி திருக்குரானை உயர்த்தி சொல்லப்பட்டிருக்கிறது. திருக்குறளை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் உயிரோடு இருக்கும் போதே – அதுவும் திராவிடர் கழகம் நிலை கொண்ட திருச்சியிலேயே ஆணி அடித்தாற் போல் சொல்லப்பட்டு இருக்கிறது.
குறளை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று திருச்சியிலே, முஸ்லிமின் குரல் ஒலித்ததே – அப்படியானால் முஸ்லிம்கள் குறள் மதக்காரர்கள் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரே – அது ஏன்? அப்படிச் சொன்ன மதனீக்காவது கண்டனம் தெரிவித்தாரா? அந்த புத்தகத்துக்கு எதிராக விடுதலையில் ஒரு வரியாவது கண்டித்து எழுதினாரா? இல்லையே ஏன்?
ஒருவேளை முஸ்லிம்களின் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாரோ என்னவோ! முஸ்லிம்கள் திருக்குறளை ஏற்றுக்கொண்டார்களா, இல்லையா என்பது கூட விமர்சனம்தான். ஆனால் அந்த புத்தகத்திலே திருக்குறளை கண்டபடி திட்டியிருக்கிறார்களே அதைப் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது அவரது அடியார் வீரமணியோ கண்டித்தார்களா? களங்கமுள்ள ஏடு என்றெல்லாம் திருக்குறளை முஸ்லிம்கள் சொன்ன போது – திருக்குறள் வழியில் நடக்கும் கழகம் திராவிடர் கழகம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது வீரமணியோ எங்கு போனார்கள்? திருக்குறள் திராவிடர்களின் வா¡க்கை நூல் என்று சொன்ன ஈ. வே. ராமசாமி நாயக்கர் – அதை கேவலப்படுத்திய முஸ்லிமையோ அந்த புத்தகத்துக்கோ கண்டனம் தெரிவிக்காதது ஏன்? – இதுதான் திருக்குறளுக்கு திராவிடர் கழகம் செய்த தொண்டா?
ஒருவேளை இந்த புத்தகம் வந்ததே தெரியாது என்று சொல்லி விடுவார்கள். ஆனால் இந்து முன்னணி இந்த புத்தகங்களை வாங்கி பதிவுத் தபாலில் திராவிடர் கழகம் முதல் பகுத்தறிவுவாதிகள் அனைவருக்கும் அனுப்பியதே – அப்போது கூட வீரமணியோ அல்லது பகுத்தறிவுவாதிகளோ அல்லது தமிழறிஞர்களோ கூட கண்டிக்க வில்லையே ஏன்? இதுதான் தமிழ்ப் பற்றா? இவர்கள்தான் தமிழைக் காக்க புறப்பட்ட வீரர்களா? சரி அப்போதுதான் கண்டிக்கவில்லை. இப்பொழுதாவது கண்டிக்கத் துணிவு உண்டா? ‘தடை செய் இராமாயணத்தை’ என்று சொன்னார்களே? – அதே போல ‘தடை செய் மதனீயின் புத்தகத்தை’ என்று சொல்லத் தயாரா? பதில் சொல்வார்களா பகுத்தறிவுவாதிகள்!
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் காலத்திலிருந்தே தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஓலித்துக்கொண்டு வருகின்றன. தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தான் போராடுகிறோம் என்று தி.க.வினர் சொல்கின்றனர், ஆனால்முதன் முதலில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று கூறியவர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது நாத்திகர்களோ அல்ல. ஆத்திகர்கள்தான்.
மறைமலை அடிகள் முதல் தனித் தமிழ் இயக்க ஆத்திகர்கள் அதற்காக போராடினார்கள். இதில் தி.க.வினர் சொந்தம் கொண்டாட உரிமையில்லை. ஏனென்றால் கடவுளும் வேண்டாம், கோயிலும் வேண்டாம் என்று சொல்லுகின்ற தி.க.வினர் கோயிலில் எந்த மொழியில் வழிபாடு நடத்த வேண்டும் என்று சொல்ல உரிமையில்லைதானே!
– தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக