Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

11 நவம்பர் 2012

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!

ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய புளுகுகளையும் வரலாற்றுப் பிழைகளையும், முரண்பாடுகளையும் நாம் பார்த்தோம். இனி அவருடைய வாரிசு மணியம்மையாரின் புளுகுகளையும் மணியம்மையினுடைய மூடநம்பிக்கையையும் ஆராயலாம்.
மணியம்மை கூறுகிறார்:-
”1954 ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும் இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்ல சேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம் மதத்தில் தாம் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி தந்தை பெரியாரையும் முஸ்லீம் மதத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்த்திருத்த வேண்டுமே தவிர அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக்கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.”
(விடுதலை 6-1-1976)
அம்பேத்கர் முஸ்லீம் மதத்தில் சேரப்போவதாகச் சொன்னார் என்று சொல்கிறாரே மணியம்மை- இது உண்மையா?
drambedkarஒரு பொழுதும் உண்மையாக இருக்கமுடியாது. ஏனென்றால் அம்பேத்கர் மதமாற்ற அறைகூவல் விட்டவுடனேயே ஹைதராபாத் நிஜாம், முஸ்லீமாக மாறினால் ஒரு கோடி ரூபாயும், ஒரு கல்லூரியும் தருவதாக வாக்களித்தபோது அம்பேத்கர் அதைப் புறக்கணித்தார். அம்பேத்கர் முஸ்லீம் மதத்தை கனவில் கூட நினைத்துப்பார்த்ததில்லை.
அம்பேத்கர் கூறுகிறார்:-
”நான் இஸ்லாம் தழுவியிருந்தால் கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப்பட்டிருக்கும். ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும், ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை”.
(நூல் :- Ambedkar – A Critical study)

முஸ்லீமாக மாறினால் நாடே சீரழிந்து இருக்கும் என்று சொன்ன அம்பேத்கரா முஸ்லீம் மதத்தில் மாறப்போவதாக சொன்னார்? அம்பேத்கர் அப்படி சொல்லியிருக்கமாட்டார் என்பதற்கு மற்றொரு ஆதாரம்–
அ. மார்க்ஸ் என்பவர், ”பெரியார்?” என்ற நூலில் கூறுகிறார்: ”அம்பேத்கர் பவுத்த மதத்தைத் தழுவிய போது நீங்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியலாக இருக்கும் என (பெரியார்) அவருக்கு அறிவுரைத்ததும் இங்கே நினைவு கூறத்தக்கது.”
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியதை அம்பேத்கர் கூறியது என்று சொல்வதுதான் பகுத்தறிவா? அ.மார்க்ஸ் சொல்வது பொய்யாக இருக்கும் என்று சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால் ஆரம்பித்திலிருந்தே ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியானதாகும்,’ என்று பல தடவை கூறியிருக்கிறார்.
இதையும் நம்பாதவர்களுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரே பதில் சொல்கிறார்–
”நான் அம்பேத்கர் அவர்களைச் சந்தித்போது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டி, “போடு கையெழுத்தை; நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம்” என்றார். நான் சம்மதிக்கவில்லை.”
(விடுதலை 16-2-1959)

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் இந்தக் கூற்றிலிருந்து, அம்பேத்கர் புத்தமதத்துக்கு மாறவேண்டும் என்று சொன்னாரே தவிர இஸ்லாமுக்கு அல்ல என்பது தெளிவாகும். மணியம்மையின் இந்தப் புளுகை எதில் சேர்ப்பது? இதுதான் ஒரு தலைவிக்கு அழகா?
இதைக்கூட விட்டுவிடுவோம். இவர்கள் எதை மூடநம்பிக்கை என்று சொல்லிவந்தார்களோ, அதையே இவர்கள் நம்பினதுதான் வேடிக்கை.
maniammaiyarமணியம்மை கூறுகிறார்:-
”என்ன செய்வது, எதை எழுதுவது, எப்படி நினைப்பது என்பதே புரியவில்லை. மனதை எவ்வளவுதான் திடப்படுத்தினாலும் என்னையும் மீறிச் சில சமயங்களில் தளர்ந்து விடுகிறேன். உடனே அய்யாவின், அந்தப் புன்னதை முகம் என் கண்முன்தோன்றி, ”பைத்தியக்காரி இவ்வளவு தானா நீ! இத்தனை ஆண்டுகள் என்னோடு பழகியும் நான் எடுத்துச் சொல்லி வந்த கருத்துகளை உன்னிடத்திலே காணமுடியவில்லையே!
நீ எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் என் கொள்கையைக் கடைபிடிப்பவளாய் இருக்கப்போகிறாயோ! சாதாரணப் பெண்கள் போலேயே பக்குவமடையாத மனநிலையிலேயே இருக்கிறாயே! என்றாவது ஒரு நாள் எனக்கு இந்த நிலை ஏற்படும். இயற்கையை வெல்ல முடியாது. அப்போது எப்படி நீ இருக்க வேண்டும் என்று எத்தனை முறை உனக்கு உன்மனம் நோகாத வண்ணம் வேடிக்கைப் பேச்சாகவே சொல்லிச் சொல்லிப் பக்குவப் படுத்திவைத்தேன். என் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல், மற்றவர்களுக்கும், உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் நடந்துகொண்டு என் மனத்திற்கு வேதனை தருகிறாயே! என்று சொல்வதுபோல் தோற்றம் அளிக்கும்”.
உடனே நான் ”இல்லை-இல்லை-மன்னித்துவிடுங்கள். உங்கள் வார்த்தையை மீறி இன்று அல்ல, என்றுமே நடக்கமாட்டேன்” என்று மனதால் நினைத்துக்கொண்டு நானே ஒரு சிரிப்பும் சிரித்துக்கொண்டு என் உள்ளத்தை இரும்பைப்போல் கடினமாக ஆக்கிவிடுவேன் அப்போதுதான் என் மனதில் அமைதியும் ஒரு நிறைவும் பெறும்”.
(விடுதலை 4-1-1974)
பகுத்தறிவுவாதியான மணியம்மை கூறுகின்ற இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இந்துமதப் புராணங்களில் ஏராளமாகக் கிடக்கின்றன. அசரிரீ என்ற பெயரில் ஒரு குரல் கேட்கும். அந்த அசரிரீக் குரல், எச்சரிக்கைக் குரலாகவும், அறிவுரைக் குரலாகவும் அல்லது பாராட்டுக் குரலாகவும் இருக்கும். இப்படி அசரிரீ கேட்கும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையும் கூட.
ஆனால் இதில் பகுத்தறிவுவாதிகளின் கொள்கை அல்லது கருத்து என்ன?
அசரிரீக் குரல் தானாகவே கேட்காது. அதுவும் மனிதன் யாருமே இல்லாமல், எந்தவிதக் கருவியும் இல்லாமல் மனிதனைப் போல் பேசுவது என்பது பகுத்தறிவுக்கு முரணானது. இந்த நம்பிக்கை மூட நம்பிக்கையாகும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இப்படி பிரச்சாரம் செய்து வந்த பகுத்தறிவுவாதிகளின் தலைவி மணியம்மை என்ன கூறுகிறார்?
தான் சோர்ந்து இருக்கும் சில சமயங்களில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தனக்கு ஆறுதல் கூறுவதுபோல் தோற்றம் அளிக்கும் என்கிறார் மணியம்மை. இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படி தோற்றம் அளிப்பார்? அப்படியே தோற்றம் அளித்தாலும் பேசுகின்ற மாதிரி குரலுடன் தோற்றமளிக்க முடியுமா? ஒருவர் இறந்தாலும் கூட அவரை நினைக்கும்போது அவருடைய தோற்றம் நம் மனதில் எழும் என்று சொல்லலாம். அது வெறும் எண்ணமே தவிர உண்மை அல்ல என்றும் சொல்லலாம். அப்படியென்றால் உண்மையில்லாத இந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், தோற்றத்திற்கு அல்லது எண்ணத்திற்கு எதற்காக மன்னித்துவிடுங்கள் என்று சொல்ல வேண்டும்? மன்னித்துவிடுங்கள் என்று சொன்னால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன்னித்துவிடுமா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் ஆறுதல் சொல்லியவுடன்தான் மணியம்மைக்கு மனதில் அமைதியும், நிறைவும் பெறும் என்பதுதான் பகுத்தறிவா? எவ்வளவோ ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோழர்கள் மன அமைதியும் நிறைவும் இல்லாமல் திராவிடர்க் கழகத்திலிருந்து பிரிந்து வந்தார்கள். அப்போதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றி மன அமைதியைக் கொடுத்திருக்கலாமே- ஏன் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றவில்லை? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன அமைதியை கொடுத்துவிட முடியுமா?
இந்தத் தோற்றமே நம்மால்தான் ஏற்படுகிறது என்று சொல்வார்களானால் அதற்காக மன்னிப்பு எதற்கு? தோற்றமே நம்மால் தான் ஏற்படுகிறது என்கின்றபோது அதற்காக ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் மன அமைதி பெறுகிறது என்று சொல்வது எதற்காக? இதுதான் பகுத்தறிவு மூடநம்பிக்கை என்று சொல்வது! அதாவது பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கை.
அடுத்து-
மணியம்மை கூறுகிறார் :-
”அய்யா அவர்களிடம் சென்று நீங்கள் பயந்துவிட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விடமாட்டேன்.. என்று கூறி அவரை மகிழ்வித்தேன்”
(விடுதலை 4-1-1974)
நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்று மணியம்மை கூறுகிறாரே? இதுவாவது பகுத்தறிவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
இராமர் ஒரு காரணத்திற்காக (இராவணனை கொல்ல) இப்பூமியில் பிறந்தார். கிருஷ்ணர் ஒரு காரணத்திற்காக (கம்சனைக் கொல்ல) பிறந்தார் என்று இந்துக்கள் சொல்லும் போது அதைப் பகுத்தறிவுவாதிகள் கேலி பேசினார்கள்… விமர்சித்தார்கள்… மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்னார்கள்.
இப்படிச் சொன்ன பகுத்தறிவுவாதிகளின் தலைவி மணியம்மை, நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்று சொன்னால் அதுவும் இவர்களின் மூடநம்பிக்கைத்தானேநதான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்றால் இறப்பதும் கூட ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கும். (இது ஆத்திகர்களைப் பொருத்தவரை நம்பிக்கை. ஆனால் பகுத்தறிவுவாதிகளைப் பொருத்தவரை மூடநம்பிக்கை) அப்படியென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கரும், மணியம்மையும் இறந்தது எந்தக் காரணத்திற்காக? மணியம்மை, நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காக என்று சொன்னால் அந்தக் காரணம் என்ன என்று விளக்க வேண்டாமா?
நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காக என்று சொல்லும்போது, ஏதோ ஒரு செயல் புரிவதற்காக, சாகக் கிடந்த நான் மறுபடியும் பிழைத்திருக்கிறேன் என்று பொருள்படுகிறது. ஆனால் இதே கருத்தைத்தானே இந்துக்களும் கர்மா என்ற பெயரில் சொல்கின்றனர்! மக்கள் (தங்கள் வினைப்படி) ஏதோ ஒரு காரணத்திற்காகப் பிறக்கின்றனர். தங்கள் கர்மங்களை ஆற்றுகின்றனர். பின்பு இறக்கிறார்கள்.
ஆனால் இந்தக் கர்மக் கொள்கையை எதிர்க்கின்ற மணியம்மைதான் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் பிழைத்ததாகச் சொல்லி மறைமுகமாக கர்மா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏன் இந்த முரண்பாடு? இதுதான் இவர்களுடைய பகுத்தறிவு மூடநம்பிக்கை.
மேலும் மணியம்மை கூறுகிறார்:-
(பெரியார்) அமைதியுடன் நாம் இனி எப்படி நடந்து கொள்கிறோம். கட்டுக்குலையாமல் என்றும் போல் கட்டுப்பாடு, ஒழுக்கம் – உண்மையுடன் இருக்கிறோமா இல்லையா என்று பார்த்துக் கொண்டே இருப்பதற்காக அவரது இல்லத்திலேயே ஓய்வுடன் இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. நம்மை அவர் கவனித்துக் கொண்டுதான் நமது செயலைப்பார்த்துகொண்டு தான் இருப்பார்.
(விடுதலை 4-1-1974)
மணியம்மையினுடைய இந்தப் பேச்சு அவர்களுடைய பகுத்தறிவுப்படி மூடநம்பிக்கையா, இல்லையா?
1973-ல் இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படி 1974-ல் ஓய்வுடன் இருப்பார்? எப்படி கவனித்துக்கொள்வார்?
இறந்தவர்களின் ஆத்மா இவ்வுலகில் இருக்கும். ஒருவருடைய அப்பா அல்லது அம்மா அல்லது வேறு உறவினர்கள் போன்றவர்கள் இறந்தால் அவர்கள் நம்மோடு இருப்பார்கள். நம்மை கவனித்துக் கொள்வார்கள் – என்பது இந்துக்களுடைய நம்பிக்கை.
ஆனால் இதை மூடநம்பிக்கை என்று சொல்லுகின்ற மணியம்மையார் இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஓய்வுடன் இருக்கிறார். அவர் கவனிப்பார் என்று சொல்லுகிறாரே? அப்படியானால் இதுவும் மூடநம்பிக்கைத்தானே!
இப்படி இவருடைய பகுத்தறிவு மூடநம்பிக்கைக்கு ஏராளமான சான்றுகளைத் தந்துகொண்டே போகலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு சமாதி வைத்தது, ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நினைவுநாள் கொண்டாடுவது போன்ற இவர்களுடைய பகுத்தறிவுக்கு முரணான வகையில் மணியம்மையார் நடந்து கொண்டதை ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடர்களே கண்டித்திருக்கிறார்கள் என்றால் மணியம்மையாருடைய பகுத்தறிவு மூடநம்பிக்கை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நாம் அறியலாம். இந்த அளவுக்கு மூடநம்பிக்கை கொண்டிருந்த மணியம்மையாரும் அவருடைய சீடர்களும் ஆத்திகர்களை மூடநம்பிக்கையாளர்கள் என்று சொல்ல தகுதி இருக்கிறதா?
-தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக