முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
2 Mar 2011 | அச்சிட
“பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாது என்நா”
அத்தாவுன் அடியலால் அரற்றாது என்நா”
என அருளிச் செய்தார் ஞானசம்பந்தப் பெருமானார். பித்தொடு மயங்கியபோதும் பிறைசூடிய பித்தனை மறவாத பீடுடைப் பெருந்தகையோரே பெரியோர் என்ற பெயருக்கு உரியோராவர். அத்தகையவர்களில் ஒருவர், ஸ்ரீமத் அப்பைய தீட்சிதேந்திரர்.
அப்பைய தீட்சிதர் கி.பி.16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவான்மியூர், சிதம்பரம், வேலூர் முதலிய தலங்களில் வாழ்ந்தவர்.
வேதாகமகங்கள், புராணஇதிகாசங்கள். இலக்கணம் முதலிய சாத்திரங்கள் எல்லாம் கற்றுவல்ல பேரறிவாளர்.. பெரிய பண்டித சிகாமணி. நூற்றுநான்கு நூல்கள் இயற்றிய மேதை. கவிச்சக்கரவர்த்தி. நூலாசிரியர், உரையாசிரியர் முதலிய ஆசிரியத் தன்மை நிறைந்தவர். எல்லாவற்றினும் மேலாக பரமசிவ பக்த சிகாமணி.
பிற சமயத்தார் சைவத்திற்குத் தீங்கு இழைக்கத் தொடங்கும் அவ்வப்போது, தம் வாக்கு வல்லபத்தால், அவர்களை வென்று சைவப் பயிர் வளர்த்த வைதிகசைவக் காவலர்.
“அஞ்சுவது யாதொன்று மில்லை; அஞ்ச வருவது மில்லை” என்ற ஞான வீரர்களில் ஒருவராகிய அவருக்கும் ஓரச்சம் தோன்றிற்று. அவருக்குத் தோன்றிய அந்த அச்சம் யாது?
“நனவிலும் கனவினும் நம்பா வுன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்”
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்”
என்று ஆளுடைய பிள்ளையார் அருளிச் செய்தபடி நனவு கனவு ஆகிய இரு நிலைகளிலும் சிவசிந்தனை நமக்கு நீங்காமல் இருக்கின்றது. எனினும் சாகுங் காலத்தில், உளவாகும் வேதனைகளால் அறிவு அழியுமே, அலமரலுறுமே! அப்போதும் என் சிந்தையாகிய வண்டு, சிவனடித் தியானத் தேனில் திளைக்குமோ? நோய், கவலை, கலக்கம் முதலியவற்றிற்பட்டு இளைக்குமோ? என்பதுதான் அவர் கொண்ட ஐயம். அவ்வையத்தைத் தீர்த்துக் கொள்ளவோர் உபாயங் கருதினார்.
நம்பிக்கையுள்ள மாணவர்களிடம், ‘நான் ஊமத்தங்காயைத் தின்பேன். அதனால் என் அறிவு கலங்கிப் பித்துறுவேன். அது தெளியும்வரை யான் செய்யும் செயல்களைக் குறித்துக் கொள்வதோடு, யான் பிதற்றுவனவற்றையும் எழுதி வைமின்’ என்று பணித்தபின் ஊமத்தங்காயைத் தின்றார். பித்தும் பிடித்தது. பிதற்றலும் தொடங்கியது. அப்பிதற்றலில் வெளிப்பட்டவையே‘ஆன்மார்ப்பணத் துதி சுலோகங்கள்’ ஐம்பதும். இக்காரணத்தால் இந்நூலுக்கு, ‘உன்மத்த பஞ்சாசத்’எனவும், ‘உன்மத்தப் பிரலாபம்’ எனவும் வேறு பெயர்களும் உள.
மாற்று மருந்தால் பித்தம் மாறித் தெளிந்தபின், தம் மாணாக்கர்கள் காட்டிய சுலோகங்களைக் கண்ட பின்னர், தீட்சிதர், தாம் கொண்டிருந்த ஐயம் அகலப் பெற்றார்.
“உண்டியிற் பட்டினி நோயிலுறக்கத்தில் – ஐவர் கொண்டியில்” பட்டபோதும், சாம் அன்றும் சங்கரனை நம் மனம் மறவாது எனத் தைரியம் கொண்டார்.
இனி, இந்நூலின்கண் அமைந்த சில அரிய கருத்துக்களைக் காண்போம். தீட்சிதர் அருளிய ஆன்மார்ப்பணத் துதி சுலோகங்கள்,, “அன்பினால் ஆவியோடியாக்கை ஆனந்தமாய்க் கசிந்து உருகி”ப் பாடியவை. உடலவிழ உயிரவிழ உணர்வவிழ உளமவிழ உண்மைப் பொருளை உணர்ந்து பாடியவை. பரமசிவ பத்தர் உள்ளந் தித்திக்கும் அன்புச் சுவை ததும்பியவை. வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்தவர், கோவை. கவியரசு.கு.நடேசக் கவுண்டர் அவர்கள்.
சாகசம் பொறுக்க வேண்டுதல்
முதற்பாட்டில் முழுமுதலாகிய சிவபரம்பொருளின் உரைத்தற்கரிய பெருமையை உரைக்கத் துணிந்த தம்முடைய ‘சாகசத்தை’ப் பொறுக்கும்படி வேண்டி, யாராலும் சொல்லுதற்கு அரிதாகிய அந்த அளப்பரும் பெருமையைச் சொல்லும் ஆற்றலும் அவனிடத்து மெய்யன்பு உடையவருக்கே எய்தும் என்கின்றார்.
‘தேவதேவனே! அதிவிசித்திரமான இந்த உலகம் ஒரு காரியப்பொருள். இது செனித்தது எவனிடமிருந்து? அது செனித்த இடம் நீயே ஆவை. எனில் உன்னுடைய மேலாம் புகழ்தனை யாவர் அறிதற்கு இயலும்? எனினும் நீ அன்பெனும் பிடிக்குள் அகப்படுவாய் எனத் தெளிந்து, அளவிலாத அந்த அன்பையே துணையாகக்கொண்டு உன்னைத் துதிக்கும் என்னுடைய சாகசத்தைப் பொறுப்பாயாக’
தேவ தேவபல் திறப்படு படைப்பிது
செனித்ததிங் கெவன்பானின்
றாவை நீயவ னேயெனி லுனதுமே
லாம்புகழ் தனையம்ம!
ஏவர் தேர்குவ ரெனினுமன் பெனும்பிடிக்
கெய்துவை யெனத்தேறித்
தாவி லன்பையே துணைகொடு துதிக்குமென்
சாகசம் பொறுப்பாயே. (1)
செனித்ததிங் கெவன்பானின்
றாவை நீயவ னேயெனி லுனதுமே
லாம்புகழ் தனையம்ம!
ஏவர் தேர்குவ ரெனினுமன் பெனும்பிடிக்
கெய்துவை யெனத்தேறித்
தாவி லன்பையே துணைகொடு துதிக்குமென்
சாகசம் பொறுப்பாயே. (1)
[பல்திறப்படு படைப்பு = பலவகையான வேலைப்பாடு விசித்திரங்கள் அமைந்த படைப்பு. பலதிறப்பாடு அமைந்த இவ்வுலகம் எவனிடமிருந்து தோன்றிற்றோ அவன் நீயே ஆகுவை என்க.
தாஇல் அன்பு = கெடுதல் இல்லாத அன்பு.
சாகசம் = உள்ளத்துணிவு. (செய்ய முடியாத செயலைச் செய்ய முற்படுதல்).]
தாஇல் அன்பு = கெடுதல் இல்லாத அன்பு.
சாகசம் = உள்ளத்துணிவு. (செய்ய முடியாத செயலைச் செய்ய முற்படுதல்).]
அகிலமும் உன் படைப்பே
செய்வோனை இன்றிச் செயப்படுபொருள் இல்லை. ஆதலால், பேரறிவாளன் ஒருவன் இன்றி விசித்திரமான இவ்வுலகம் சீராயமையுந் திறம் இல்லை.. விசித்திரமான இந்த உலகம் அவயவப் பகுப்புடையதாக உளது.. ஆதலால் உறுதியாக இது ஒருவனால் படைக்கப்பட்டதேயாகும். இதைப் படைத்தவன் பேரறிவாளனாகிய சித்து. உலகம் சடம்.. சடமாகிய காரியத்துக்கு முதற்காரணமாகிய சடமும் உலகைப் படைத்தவனோடு இல்லையானால் சடமாகிய உலகம் நிலவுமோ?
சடம் நிமித்தமாகாது. நிமித்தமும் சடமாகாது. திறனிலாத உயிர் தனக்கு உடலையும் உலகையும் படைத்துக் கொள்ள இயலாது. ஆதலால் ஐயனே, அனைத்தும் உன் படைப்பு என்று நான் அறிந்து கொண்டேன், என்று தீட்சிதர் பேரறிவாளனாகிய இறைவனை இன்றி யிவ்வுலகம் சீராயமையுந் திறனில்லை என்று உணர்த்துகின்றார்..
நிலமு மற்றவு மவயவப் பகுப்புள;
நிச்சயம் படைப்பேதான்;
இலகு மப்படைப் பியற்றுவோ னுடனுபா
தானந்தா னிலையானால்
நிலவு மோசட நிமித்தம தாகுமோ?
நிறுவுமோ திறனில்லாது
அலைபடுமுயிர்? அகிலமுன் படைப்பென
ஐயநான் அறிந்தேனே. (2)
நிச்சயம் படைப்பேதான்;
இலகு மப்படைப் பியற்றுவோ னுடனுபா
தானந்தா னிலையானால்
நிலவு மோசட நிமித்தம தாகுமோ?
நிறுவுமோ திறனில்லாது
அலைபடுமுயிர்? அகிலமுன் படைப்பென
ஐயநான் அறிந்தேனே. (2)
[இயற்றுவோன் = கருத்தா.
உபாதானம் = முதற்காரணம். குடத்துக்கு மண்போல. உயிர் உலகத்தை நிறுவுமோ என்க.
அகிலம் = அனைத்தும்.]
உபாதானம் = முதற்காரணம். குடத்துக்கு மண்போல. உயிர் உலகத்தை நிறுவுமோ என்க.
அகிலம் = அனைத்தும்.]
இந்தப் பாடலில் சைவசித்தாந்தத்தின் முக்கியமான கோட்பாடு ஒன்றினைத் தீட்சிதர் எடுத்தாளுகின்றார்.
நிமித்த காரணம் ஒன்றே சிவத்துக்கு உரியது; உபாதான காரணம் உரித்தன்று. ஆயின், பிரபஞ்ச உபாதான காரணத்தின் இருப்புநிலை யாது என்ற வினாவுக்கு முண்டகோபநிடதம் பதிலிறுக்கின்றது.
“ஊர்ணநாபி (சிலந்திப்பூச்சி) யானது எப்படி நூலைச் சிருட்டிக்கின்றதோ, பூமியிலெப்படிப் பல ஓஷதிகள் (தாவரங்கள்) உண்டாகின்றனவோ, மனிதன் மேனிமீது எப்படித் தலைமயிர் உடம்புமயிர் உண்டாகின்றனவோ அப்படியே பிரமமாகிய அட்சரத்திலிருந்து (அழிவிலாதது) யாவும் உண்டாகின்றன”
இந்த முண்டகோபநிடத வாக்கியத்திலிருந்து, மயிரும் நூலும் சித்தல்லாத அசித்தாயிருத்தலைக் கொண்டு, அவை, உடம்பாகிய அசித்திலிருந்து பரிணாமமாக வந்தன என்றும், உயிராகிய சித்திலிருந்து வந்தனவல்ல என்பதும் அறியலுறுவாருக்கு அறியலாகும். சித்துப் பொருள் பரிணமியாது. கூறுபடாது. சடமே மாற்றங்கள் எய்தும்.
பிரபஞ்சத் தோற்றத்திற்கு ஊர்ணநாபி உவமானமே மிகப் பொருந்துவதாகும். ஊர்ணநாபியின் உடம்பே உபாதானகாரணம், அதன் உயிரே நூலினைச் செய்யும் நிமித்தகாரணம். இதைப்போலவேதான் சிவம் பிரபஞ்சத் தோற்றத்துக்கு நிமித்தகாரணமும் சிவசத்தி துணைக்காரணமும் சிவசத்தியோடு கூடிப் பரிக்கிரக சத்தியாக உள்ள மாயை என்னும் சூக்கும சடப்பொருள் உபாதான காரணமும் ஆகும். (பரிக்கிரகசத்தி = வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளும் ஜடசத்தி.)
சிவவியாபகத்தில் சக்திரூபமாக பிரபஞ்ச முதற்காரணமாகிய உபாதானமும் வியாப்பியமாக அடங்கியுள்ளது.
அதனால், சிவமே எப்பொருட்கண்ணும் உடங்கியைந்து வியாபியாய் நிற்றலின், “இலகும் அப்படைப் பியற்றுவோனுடன் உபாதானந்தான் இலையானால் நிலவுமோ” என்றும், “சட நிமித்தம தாகுமோ?” என்றும் அப்பைய தீட்சிதேந்திரர் வினவுகின்றார்.
யாவருந் தொழநின்றவன்
‘அவனன்றி ஓரணுவுமசையாது’, சிவனே உலகை உயிர்களின் பொருட்டு இயக்கும் உபகாரி. ‘தன்மை பிறரால் அறிய முடியாத தன்மை’ உடைய அவனை வேத சிரசாம் உபநிடதங்கள் அளவில் பல மகிமையுடைய தேவனெனத் துதிக்கின்றன. மறையவர்குழு, சன்மார்க்க நெறியிலொழுகும் தொண்டர்கள், தேவலோகவாழ்வை ஒரு பொருட்டாக மதியாத யோகியர் முதலியோர் ஆணவ இருள்மலம் நீங்கச் சிவனைத் தம் இதய கமலமீதில் இருத்தி இடைவிடாது தியானிக்கின்றனர். அத்தகைய மனவிருள் அகற்றும் சோதி சிவம்.
யாவுமசை விக்குமுப காரிமறை முடிகளுனை
அளவில்பல மகிமையுடைய
தேவென விசைப்பமறை யோர்முதலி யோர்வரத
செந்நெறிசெல் தொண்டுபுரிவார்
பூவுலக வாழ்வமரர் வாழ்வுமதி யாதசிவ
யோகியர் பொருந்திருண்மலம்
ஓவுற மனக்கமல மீதிடை விடாதுநினை
உள்குவர் உயர்ந்த பொருளே. (5)
அளவில்பல மகிமையுடைய
தேவென விசைப்பமறை யோர்முதலி யோர்வரத
செந்நெறிசெல் தொண்டுபுரிவார்
பூவுலக வாழ்வமரர் வாழ்வுமதி யாதசிவ
யோகியர் பொருந்திருண்மலம்
ஓவுற மனக்கமல மீதிடை விடாதுநினை
உள்குவர் உயர்ந்த பொருளே. (5)
குலத்தியல்பு மறந்தேன் நினதருள் நினையேன்
அப்பைய தீட்சிதேந்திரரின் முன்னோரும் (ஏன்? பின்னோருங் கூட) சிவனடியே தொழும் பரம சாம்பவர்கள். தாங்கள் பிறந்துள்ள குடியின் சிறப்பால், இயல்பாகவே சிவபரம்பொருளின் சிறப்பை, அருமை பெருமைகளை அறியக் கூடிய பேறுடையவர்கள். அப்புண்ணியம் மிகவும் வாய்க்கப் பெற்றிருந்த பெருமகனாரையும் ஐம்புலப்பகை அலைக்கின்றதாம் அதனால் அவரிடமிருந்து குடிப்பிறப்பின் குணம் நழுவிப் போயிற்றாம். உயர்குடிப் பிறக்கும் புண்ணியம் பெற்றிருந்தும் அதனைக் கைநழுவ விடும் அறிவிலிகளின் குற்றத்தைத் தம்மேல் ஏற்றி தீட்சிதேந்திரர் இவ்வாறு இரங்கிக் கூறுகின்றார்.
வழிவழி யடியர் மரபினில் வினையேன்
வந்தனன்; மதனனை வென்றோய்!
ஒழிவறு நினது கருணையா ரமுத
உததியின் திவலையும் சுவைத்தேன்.
அழிதகை யேனிந் திரியவாஞ் சையினால்
அவத்தமே யலைந்தனன் அந்தோ
தொழவுன தடிகள் சிந்தைசெல் லாமல்
தொலைத்தனன் தொல்குடிப் பிறப்பே. (7)
வந்தனன்; மதனனை வென்றோய்!
ஒழிவறு நினது கருணையா ரமுத
உததியின் திவலையும் சுவைத்தேன்.
அழிதகை யேனிந் திரியவாஞ் சையினால்
அவத்தமே யலைந்தனன் அந்தோ
தொழவுன தடிகள் சிந்தைசெல் லாமல்
தொலைத்தனன் தொல்குடிப் பிறப்பே. (7)
[மதனன் = காமன்.
கருணை ஆர் அமுத உததி = கருணையாகிய நிறைந்த கடல்.
திவலை = சிறுதுளி..
அழிதகையேன் = கேடுறுவேன்.
இந்திரிய வாஞ்சை = பொறிகள் தூண்டும் அவாக்கள்.
அவத்தம் = பயனில்லாமை.]
கருணை ஆர் அமுத உததி = கருணையாகிய நிறைந்த கடல்.
திவலை = சிறுதுளி..
அழிதகையேன் = கேடுறுவேன்.
இந்திரிய வாஞ்சை = பொறிகள் தூண்டும் அவாக்கள்.
அவத்தம் = பயனில்லாமை.]
ஆத்துமத் துரோகி
சிவன் எளிய பூசைக்கே உளம் மகிழ்வான். அவனை மகிழ்விக்கப் பச்சிலையும் நீரும் போதும்.. ‘குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க்கு இமையாக் குஞ்சரமும், படங்கொள்பாயும் பூவணையும்’ அளிப்பவன், அடியார்க்கு எளியனாகிய சிவன்.. பிறர் யாரும் வேண்டாத புல்லும் எருக்கமும் தும்பையும் அவனுக்களித்து முத்தியாகிய பெருஞ்செல்வத்தை எளிதில் பெறலாம். இதனை நன்கறிந்திருந்தும் உலகவர் பலர் வஞ்சப் புலன்களுக்கு ஆட்பட்டு, ஆத்துமத் துரோகிகளாய் அவனை வணங்காது அருநரகில் அழுந்துகின்றனர். இவர்களுடைய அறியாமையைத் தன்மேலேற்றித் தீட்சிதேந்திரர், “சிவனே! நான் எனக்கே வெல்லரும் பகையாய்ப் பொருந்தினன்” எனக் கவலைப்படுகின்றார்.
புல்லிய லெருக்கம் தும்பைகொண் டுன்னைப்
பூசிக்க நூலெலாம் புகலும்;
புல்லுவ ததனால் முத்தியாம் திருவைப்
புன்மையேன் இதையறிந் திருந்தும்
புல்லிய கரண வயத்தனாய் வீணாள்
போக்கினேன், சிவசிவ, நரகம்
புல்லிய எனக்கே வெல்லரும் பகையாய்ப்
பொருந்தினென் கரும்பனுக் கனலே. (8)
பூசிக்க நூலெலாம் புகலும்;
புல்லுவ ததனால் முத்தியாம் திருவைப்
புன்மையேன் இதையறிந் திருந்தும்
புல்லிய கரண வயத்தனாய் வீணாள்
போக்கினேன், சிவசிவ, நரகம்
புல்லிய எனக்கே வெல்லரும் பகையாய்ப்
பொருந்தினென் கரும்பனுக் கனலே. (8)
[புல் = அருகம்புல்.
இயல் எருக்கம் = எங்கும் கிடைக்கும் எருக்கம்பூ.
புல்லுவது = தழுவுவது.
புல்லிய கரணம் = இழிந்த கரணங்கள்.
புல்லிய = பொருந்தும்படி.
எனக்கே பகையாய் = ஆத்துமத் துரோகியாய்.
கரும்பனுக்கு அனலே = மன்மதனுக்குத் தீ யானவனே.]
இயல் எருக்கம் = எங்கும் கிடைக்கும் எருக்கம்பூ.
புல்லுவது = தழுவுவது.
புல்லிய கரணம் = இழிந்த கரணங்கள்.
புல்லிய = பொருந்தும்படி.
எனக்கே பகையாய் = ஆத்துமத் துரோகியாய்.
கரும்பனுக்கு அனலே = மன்மதனுக்குத் தீ யானவனே.]
உனக்கே அடைக்கலம் ஆனேன்
கதி அடைதற்கு உரிய வழிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனவும் ஞானம், பக்தி, கன்மம் என்றும் சாத்திரங்கள் பலவற்றைக் கூறுகின்றன. அவற்றை அறியவும் கடைப்பிடித்தொழுகவும் அறிவு முயற்சி முதலியன வேண்டும். அவற்றை அறியும் வல்லமை இல்லாத எளியவர்கள் என்செய்வது? ஆவி, உடல், பொருள் அனைத்தும் உனக்கே கையடையாக்கினேன் என்று சிவனிடத்தில் சரண் புகுதலே தம்மைப் போன்ற எளியவர்களுக்கு வழியென்றும், தாம் அவ்வாறே மலைமடந்தையை இடப்பாகங்கொண்ட சிவனிடம் அடைக்கலம் புகுவதாகவும் தீட்சிதேந்திரர் பாடுகின்றார்.
இன்றேயென் ஆவிதனை உடலுடைமை
ஆவனமற் றுளவற் றோடும்
நன்றேயர்ப் பிக்கின்றேன், மலைமடந்தை
தனையிடங்கொள் நாத, நாயேன்
நின்தூய நிலைதெளியேன், கருமங்கள்
செய,யோக நிலையில் நிற்க,
ஒன்றேனும் வலனல்லேன், துணையிலேன்,
சரணுனக்கே உறுகின் றேனே. (15)
ஆவனமற் றுளவற் றோடும்
நன்றேயர்ப் பிக்கின்றேன், மலைமடந்தை
தனையிடங்கொள் நாத, நாயேன்
நின்தூய நிலைதெளியேன், கருமங்கள்
செய,யோக நிலையில் நிற்க,
ஒன்றேனும் வலனல்லேன், துணையிலேன்,
சரணுனக்கே உறுகின் றேனே. (15)
எல்லா உலகத்தையும் படைக்கும் பிரமனைப் படைத்து அவனுக்கு வேத முதலிய கலைகளையெல்லாம் சிவனே யளித்தனன் என்று சுவேதாச்வதர உபநிடதம் கூறும்.. சிவனே சகல கலைகளையும் அருளியவன். வேதம், ‘ஈசானஸ் சர்வ வித்யானாம்’ எனத் துதிக்கும். சிவனையே ஜகத்குரு என வேதம் கூறும். ‘ஸர்வாதி குரு சிவனே’ என்றார். இவ்வாசிரியரே சிவதத்துவ விவேக நூலில் “ஈச்சுவரனுடைய அருளால்தான் ஒருவனுக்கு அத்துவித வாசனை உண்டாகின்றது”என்றார். பிரம வித்தியா அவனுடைய நாயகி யாதலாலே அவளே நல்லாள் ஆவாள். “அவனன்றி (வீடு பேறாகிய) ஊர் புகுமாறு அறியேனே” என்றார் திருமூலநாயனார். அத்தகைய அவனுக்கே இன்றே நான் அடைக்கலம் ஆனேன் என்கின்றார் ஆசிரியர்.
எல்லா உலகும் ஈன்றானை
முன்னே ஈன்ற இறையோனே,
எல்லா மறையும் புராணமுதற்
கலைகள் எல்லாம் அவற்கீந்தோய்,
எல்லா ருக்கும் முதற்குருவே
ஆன்மபோ தமிசைப் போனே,
நல்லாள் கணவா உனக்கேயிந்
நாளே தஞ்ச மானேனே. (16)
முன்னே ஈன்ற இறையோனே,
எல்லா மறையும் புராணமுதற்
கலைகள் எல்லாம் அவற்கீந்தோய்,
எல்லா ருக்கும் முதற்குருவே
ஆன்மபோ தமிசைப் போனே,
நல்லாள் கணவா உனக்கேயிந்
நாளே தஞ்ச மானேனே. (16)
வேண்டத் தக்கது அறிவோன்
“பரசிவமே! நான் உன் அடியன் என்று உன்னிடத்தில் பலமுறை சொல்லத் தேவையில்லை. உயிருக்குயிராக இருந்து என் இச்சைஅறிவு செயல்களை நடத்துவிக்கின்ற நீ, என் மனத்திருந்த கருத்தினையும் முடித்தருளுவாய். ஆகையால், என் துயரை நீயே அறிவாய். நான் உணர்த்தத் துணிந்தால் என் அடிமைத்திறத்துக்கு ஆவதன்று. இருப்பினும் என் அச்சத்தால் சொல்லத் துணிந்த என் பிழையைப் பொறுத்தருள்க” என இப்பாடலில் தீட்சிதர் சிவனிடம் வேண்டுகின்றார்.
இந்தப் பாடலில், நமக்கு என்ன வேண்டும் எனச் சிவன் அறிவான்; எனவே, அவனிடம் அடுக்கடுக்காகக் கோரிக்கைகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என தீட்சிதேந்திரர் நமக்குப் போதித்தருளுகின்றார்.
நின்னடியன் நானென்ப தென்றுநிலை
யாம்வாய்மை நின்பால் நாயேன்
பன்னுவதென்? நீயேதா னறியாயோ
பரசிவமே பற்றொன் றின்றி
இன்னலிற் சுழல்கின்றேன் என்பதும்நீ
அறிந்ததுவே எளியேன் பாடு
சொன்னதுவும் பிழையருளாற் பொறுத்தேன்று
கொண்டு துயர்தொலைத்தாள் வாயே. (20)
யாம்வாய்மை நின்பால் நாயேன்
பன்னுவதென்? நீயேதா னறியாயோ
பரசிவமே பற்றொன் றின்றி
இன்னலிற் சுழல்கின்றேன் என்பதும்நீ
அறிந்ததுவே எளியேன் பாடு
சொன்னதுவும் பிழையருளாற் பொறுத்தேன்று
கொண்டு துயர்தொலைத்தாள் வாயே. (20)
இதுவோ பெரியோர்க் கியல்பாவது?
ஈசுவரனும் சீவனும் உடன் தோன்றியவர்கள் என்பது வேதாந்திகள் மதம்.. மாயையே சிவனையும் சீவனையும் பிரித்து வைத்துளது என்பர், வேதாந்திகள். ஈசன் பிரமானந்தத்தை என்றும் நுகர்கின்றான். சீவன் அவிச்சையொடு சேர்ந்து அவ்வின்பத்தை இழந்தான். ஈசுவரனே சீவனுடைய அவிச்சைச் சேர்க்கையை நீக்கி, இன்பத்தில் பங்கு அவனுக்கும் அளிக்க வேண்டும். அங்ஙனம் இருக்க சீவனாம் “என் பங்குச் சொத்தையும் உன்பங்கில் வைத்துக் கொண்டு மறைத்து அனுபவிப்பீர்; என்னை அனுபவிக்க விடாமல் மாயைத் திரையிட்டு என் அறிவை மறைத்தீர்; பொய்ம்மையாகப் பிச்சை ஏற்று உண்பீர். உடன் பிறந்தானாகிய உன்னுடன் ஒட்டி இருந்தால்தானே இன்பனாகிய உன்னோடு நானும் இன்பம் அனுபவிக்க இயலும்? அப்படியிருக்க, நீ என்னை விட்டுப் பிரிந்திருத்தல் உலகத்துக்கெல்லாம் நல்லொழுக்கம் பிரதிஷ்டை செய்யும் பெரியோராகிய உமக்கு இது சரியாமோ?” என்று சிவனிடம் தீட்சிதர் உரிமைப் போராட்டம் நிகழ்த்துகின்றார்… .
இருவர்க்கும் பொதுவாம் இன்பமா நிதியை
எந்தைநீர் மறைத்தனு பவிப்பீர்,
பொருவரு மாயைத் திரையினால் மறைத்தீர்,
பொய்ம்மையே பிச்சைதேர்ந் துண்பீர்,
பெரியிர்நீர் உலகம் எவைக்கும் நல்லொழுக்கப்
பிரதிட்டை செய்பவர் நீரே
சரியிது தானோ வெனைப்பிரிந் திருத்தல்
தந்தையீர் சார்பரு ளீரே. (35)
எந்தைநீர் மறைத்தனு பவிப்பீர்,
பொருவரு மாயைத் திரையினால் மறைத்தீர்,
பொய்ம்மையே பிச்சைதேர்ந் துண்பீர்,
பெரியிர்நீர் உலகம் எவைக்கும் நல்லொழுக்கப்
பிரதிட்டை செய்பவர் நீரே
சரியிது தானோ வெனைப்பிரிந் திருத்தல்
தந்தையீர் சார்பரு ளீரே. (35)
எச்சிலை உனக்கு அர்ப்பித்தேன் பொறுத்தருள்க
தகுதியில்லாதவர்களிடம் சென்று பொய்யும் மெய்யும் இயம்பிப் பாடிப் பொருள் பெற்று மானமின்றி வயிறு வளர்த்தல் புன்புலவரியல்பு. பொய்ம்மையாளரைப் பாடாமல், இறைவனைப் பாடினால் “இம்மையே தரும்சோறும் கூறையும் – ஏத்தலா மிடர்கெடலுமாம்; அம்மையே சிவலோகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே” என ஆளுடைய நம்பிகள் அறிவுரை வழங்கினார்.
அப்படியிருக்க நான், முன்னரே, இழிந்தோர் பலர்பால் காட்டிய என் ஏழைமையை இன்று உன்பால் துதியாக்கிக் காட்டிய என் திறமையை என்னென்று சொல்வது என்கிறார், தீட்சிதேந்திரர்..
ஏனையர்பால் மொழிந்த ஏழைமை இகழ்ச்சியும் நரகும் தரும். அதனையே இறைவனிடம் மொழிந்தால் புகழும் சிவலோகமும் தரும் என்பதே அப்பெருமகனார் கருத்தாம்.
வயிற்றை நிரப்பல் மாத்திரமே
மன்னும் குறிக்கோள் எனக்கொண்டே
எயிற்றை இளித்துக் கீழோர்முன்
இசைத்த எளிமை தனைக்கொண்டே
பயிற்றுந் துதியாய்ப் பாடியுன
பாதமலருக் கணிந்தேனென்
வயிற்குற் றத்தை மறுபடியும்
வளர்த்தே னெந்தாய் மதிசூடி. (48)
மன்னும் குறிக்கோள் எனக்கொண்டே
எயிற்றை இளித்துக் கீழோர்முன்
இசைத்த எளிமை தனைக்கொண்டே
பயிற்றுந் துதியாய்ப் பாடியுன
பாதமலருக் கணிந்தேனென்
வயிற்குற் றத்தை மறுபடியும்
வளர்த்தே னெந்தாய் மதிசூடி. (48)
தேவ உன்திருவடி சிக்கெனப் பிடித்தேன்
சதாசிவனே! யான் எனது என்பன அனைத்தையும் உன் திருவடித் தாமரைக்கு அர்ப்பித்துவிட்டேன். உனதின்னருள் வழங்கிப் பிறவித்துயர் தவிர்க்க என வேண்டிக்கொண்டு சிவபாத தாமரையைச் சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துச் சிவானந்தப் வெள்ளத்தில் திளைத்த தீட்சிதேந்திரரின் நிலையைப் பின்வரும் பாடல் காட்டுகின்றது.
என்றும் சிவமாய் இலங்குகின்ற
எம்மானே என்மன முதல
இன்றுன்பாத தாமரைக்கே இட்டேன்
இறுகப் பற்றினேன்
ஒன்று மொழியா தென்குற்றம்
உள்ள வெல்லாம் பொருத்தருளித்
துன்றும் துயரக் கடனின்று
தூக்கி யென்னைக் காப்பாயே
எம்மானே என்மன முதல
இன்றுன்பாத தாமரைக்கே இட்டேன்
இறுகப் பற்றினேன்
ஒன்று மொழியா தென்குற்றம்
உள்ள வெல்லாம் பொருத்தருளித்
துன்றும் துயரக் கடனின்று
தூக்கி யென்னைக் காப்பாயே
இப்பாடலே இச்சிவராத்திரியின்போது சிவனாரிடத்து நாம் வேண்டுவதாக அமையட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக