சிகாகோ கோர்ட்டில் அவன் அளித்த வாக்குமூ்லத்தில் இதைக்குறிப்பிட்டுள்ளான். மேலும் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பாவுக்கும் ஐஎஸ்ஐ பெரும் உதவிகளைச் செய்ததாகவும் ஹெட்லி கூறியுள்ளான்.
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கனடிய பாகிஸ்தானியரான தஹவூர் ராணா, அமெரிக்க பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராணா மீதான வழக்கின் விசாரணை சிகாகோ கோர்ட்டில் தொடங்கியுள்ளது. அதில் கலந்து கொண்டு ஹெட்லி வாக்குமூலம் அளித்து வருகிறான். ராணாவுக்கும் தனக்கும் உள்ள தொடர்புகள், பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐக்கும் தனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கூறி வருகிறான்.
2வது நாளாக ஹெட்லி கொடுத்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தவை விவரம் வருமாறு:
சிவசேனாவைக் கொலை செய்ய லஷ்கர் இ தொய்பாவும், ஐஎஸ்ஐயும் கூட்டாக திட்டமிட்டிருந்தனர். இந்த சதித் திட்டத்தில் நானும் பங்கு பெற்றிருந்தேன்.
மும்பையில் நடந்த தாக்குதலுக்கு முன்பாக நான் மும்பைவந்திருந்தபோது, சிவசேனா தலைமை அலுவலகத்திற்கும் சென்று உளவு பார்த்து தகவல்களைச் சேகரித்தேன். சிவசேனா ஒரு தீவிரவாத அமைப்பு என்பது எங்களது கருத்து. இதனால்தான் அதன் தலைவரைக் கொலை செய்யத் திட்டமிட்டோம்.
எந்தவித சந்தேகமும் இல்லாமல், நான் சிவசேனா தலைமையகத்தை உளவு பார்த்தேன்.
என்னை பாகிஸ்தானிலிருந்து இயக்கியவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த மேஜர் இக்பால், லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த சஜீத் மிர் மற்றும் ராணாவும் எங்களுடன் இணைந்திருந்தார்.
நாங்கள் நால்வருமே சந்தித்து பேசிக் கொண்டபோது சிவசேனா மீதான எங்களது துவேஷத்தை வெளிப்படுத்தினோம்.
சிவசேனாவின் செய்தித் தொடர்பாளரா ராஜாராம் ரெக்கியுடன் நான் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் சிவசேனா குறித்த தகவல்களை அறிய முயன்றேன்.
எனக்குக் கிடைத்த தகவல்களை நான் ராணா, மேஜர் இக்பால், சஜீத் மிர் ஆகியோருக்கும் தெரிவித்தேன்.
பின்னர் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் நான் பாகிஸ்தான் திரும்பினேன். அங்கு மேஜர் இக்பாலையும், சஜீத்தையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சந்தித்தேன்.
பாலா (பால்தாக்கரே) , ராஜாராமின் பாஸுடன் (உத்தவ் தாக்கரே) அமெரிக்கா வரவுள்ளதாகவும், அப்போது நமது திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சஜீத்துக்கு ஒரு இமெயிலும் பின்னர் அனுப்பினேன்.
சிவசேனா ஆட்களைக் கொல்வது குறித்து நானும், சஜீத்தும் விரிவாக விவாதித்தோம். மேலும் எங்களது திட்டத்திற்குத் தேவையான தகவல்களை ராஜாராமிடமிருந்து நிறைய கறக்கலாம் என்றும் சஜீத்திடம் தெரிவித்தேன்.
மேலும் இத்திட்டம் தொடர்பாக ராணா, இக்பால், சஜீத்துக்கு நான் பலமுறை இமெயில் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டேன்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுடன் நானும், ராணாவும், நேரடித் தொடர்புகளை வைத்திருந்தோம்.
(ஹெட்லி கைப்படஎழுதியிருந்த டைரி, அதில் 2 பக்கங்களில் எழுதப்பட்டிருந்ததை ஆதாரமாக எப்பிஐ கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. அதில், பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றி வரும் இருவரின் தொலைபேசி எண்கள் இடம் பெற்றுள்ளன. இந்த இருவருருக்கும் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் நேரடித் தொடர்பு உள்ளது. இந்த இருவரும் மேஜர் இக்பால், சஜீத் மிர் என்று தெரிகிறது.
இந்த டைரியில், லஷ்கர் இ தொய்பாவின் இன்னொரு பெயரான ஜமாத் உத் தவா அமைப்பின் முக்கியப் புள்ளியான அப்துல் ரஹ்மான் மக்கி என்பவனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவன், லஷ்கர் அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத்தின் உதவியாளர் ஆவான். இந்த டைரியில், வாசி, ஜஹாங்கீர், இனாம், தெஷீன், தாஹிர், மன்சூர், காலித் ஆகியோரது பெயர்களையும் இனிஷியல்களாக குறிப்பிட்டுள்ளான் ஹெட்லி.)
மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஐஎஸ்ஐ
2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான இலக்குகளில் மும்பை சர்வதேச விமான நிலையத்தையும் சேர்க்க பாகிஸ்தானிலிருந்து எனக்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அது பின்னர் விடுபட்டு விட்டது.
தாக்குதல் சம்பவத்திற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு ஜூன் மாதம், லாகூரில் நான் அவரை சந்தித்தபோது தனது ஏமாற்றத்தை என்னிடம் தெரிவித்தார். நான் அவரை சமாதானப்படுத்தினேன்.
இக்பாலை நான் சந்தித்தபோது தாக்குதல் தொடர்பான உளவுப் பணிகளை விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர்தான் தாக்குதல் நடத்தப்போகும் பகுதிகள் குறித்த பட்டியலுக்கு ஒப்புதல் தெரிவித்தார். விமான நிலையத்தை சேர்க்காதது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தாலும் கூட பட்டியலுக்கு அவர் ஒப்புதல் அளித்தார்.
முன்னதாக, நான் இக்பாலை சந்திப்பதற்கு முன்பு சஜீத்தை சந்தித்தேன். அப்போது இந்தப் பட்டியலை அவர்தான் என்னிடம் கொடுத்தார். அதில் யூத மையமான சபாத் ஹவுஸும் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்தின் முக்கிய உளவு மையம் இது என்பதால் இதையும் சேர்த்ததாக சஜீத் கூறினார்.
என்னிடம் கொடுத்த பட்டியலில் உள்ள இடங்களுக்கு மீண்டும் ஒருமுறை சென்று பார்வையிட்டு இறுதி செய்யுமாறு என்னிடம் கூறினார் இக்பால். இதையடுத்து அவருடனும், சஜீத்துடனும் நான் பலமுறை ஆலோசனை நடத்தினேன். அதன் பின்னர் நான் மும்பை சென்றேன்.
தாக்குதல் இடங்கள் குறித்து நான் வேறு யாருடனும் ஆலோசிக்கவில்லை. இருப்பினும் பாஷாவிடம் மட்டும் நான் இதுகுறித்து விவாதித்தேன். அவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். வாழ்த்தும் தெரிவித்தார்.
அதேபோல லஷ்கர் இ தொய்பாவின் தளபதியான ஜகியூர் ரஹ்மான் லக்வியையும் நான் சந்தித்தேன். முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறி வாழ்த்தினார் என்று ஹெட்லி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
சிவசேனா மறுப்பு
இதற்கிடையே, ராஜாராம் ரெக்கி என்ற பெயரில் தங்களது கட்சியில் பிஆர்ஓ யாரும் இல்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராத் கூறுகையில், எங்களது கட்சியில் ராஜாராம் ரெக்கி என்ற பெயரில் உறுப்பினர் ஒருவர் இருக்கிறார். ஆனால் இந்தப் பெயரில் பிஆர்ஓ யாரும் இல்லை.
இந்த ராஜாராமும் தவறானவரா என்பது எங்களுக்குத் தெரியாது.நாங்கள் அவரை விசாரிக்கப் போவதில்லை. அதை செய்ய வேண்டியது உரிய அதிகாரிகள்தான்.
எங்களது கட்சிஅலுவலகத்திற்கு வெளிநாடுகளிலிருந்து, அமெரிக்கா உள்பட, பலரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வருவது வழக்கமானதுதான். கட்சி குறித்த ஆய்வுக்காக வர விரும்புவதாக வெளிநாட்டினர்தெரிவிப்பார்கள். இருப்பினும் அவர்களின் பின்னணி குறித்து விசாரித்த பிறகுதான் நாங்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கிறோம்.
அப்படித்தான் ஹெட்லியும் எங்களது அலுவலகத்திற்கு வந்து போயுள்ளார். ஆனால் அவரது உண்மையான நோககம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது என்றார்.
மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானிடம், ஹெட்லியின் வாக்குமூலம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதுகுறித்து மத்திய அரசிடம் தகவல் கோரியுள்ளோம். அமெரிக்காவில் விசாரணை நடந்து வருகிறது. எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைத்த பின்னர் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்வோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக